ADDED : ஜன 10, 2024 04:16 PM

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதை ஏற்று போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை ஜன.,19 வரை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சில போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறது. பஸ் ஸ்டிரைக்கிற்கு தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இன்று (ஜன.,10) இந்த மனு மீதான விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில், ''பேச்சுவார்த்தை முற்று பெறாத நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜன 19-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், வேலை நிறுத்தம் சட்டம் விரோதமானது''' என வாதிடப்பட்டது.
இதனையடுத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ''அரசும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் இந்த விஷயத்தில் ஏன் பிடிவாதமாக இருக்கின்றனர். போராட்டம் நடத்த உரிமை உள்ளது. பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் பண்டிகை காலத்தில் தேவையா?'' என கேள்வி எழுப்பினார். பின்னர் இந்த வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.
பிற்பகலில் மீண்டும் நடைபெற்ற விசாரணையின்போது, ஜனவரி 19ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தன. இதனையடுத்து, 'பணிக்கு வரும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என நீதிபதிகள் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

