ADDED : பிப் 04, 2024 02:02 AM

சென்னை: தமிழக கடற்பகுதியில், 4,000 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு, 'டெண்டர்' கோரிஉள்ளது.
தமிழகத்தில் காற்றாலை மின் நிலையம் அமைப்பதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.
எனவே, தனியார் நிறுவனங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், நிலத்தில், 10,000 மெகாவாட் திறனில், காற்றாலை மின் நிலையங்களை அமைத்து உள்ளன.
மத்திய அரசு, வெளிநாடுகளில் இருப்பது போல, கடல் பகுதியிலும் காற்றாலை மின் நிலையம் அமைக்க முடிவு செய்துஉள்ளது. இதற்காக, பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில், தமிழகத்தை ஒட்டிய கடற்பகுதியில், 35,000 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க, சாதகமான சூழல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் இடையே உள்ள கடலோர பகுதி, கடலில் காற்றாலை மின் நிலையம் அமைக்க அதிக வாய்ப்புள்ள பகுதியாக ஆய்வில் தெரியவந்தது.
தமிழக கடலில், 4,000 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சூரிய எரிசக்தி கழகம் டெண்டர் கோரி உள்ளது.
டெண்டரில் தேர்வாகும் நிறுவனம், கடலில் காற்றாலை மின் நிலையத்தை அமைக்க வேண்டும். அதில், உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் வாரியம் கொள்முதல் செய்யும்.
'கடலில் அமைக்கும் காற்றாலையில், 2,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு தர வேண்டும்' என, மின் வாரியம் ஏற்கனவே மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.
நிலத்தில் அமைக்கப்படும் காற்றாலையில் மே மாதம் முதல் செப்., வரை மின்சாரம் கிடைக்கும். அதேசமயம், கடலில் அமைக்கும் காற்றாலையில், அதை விட அதிக நாட்களுக்கு மின்சாரம் கிடைக்கும்.