மதுரையில் அத்வானியை கொல்ல முயன்றோம்; பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வாக்குமூலம்
மதுரையில் அத்வானியை கொல்ல முயன்றோம்; பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வாக்குமூலம்
ADDED : ஆக 26, 2025 05:38 AM

சென்னை: மதுரையில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை, வெடிகுண்டு வைத்து கொலை செய்வதற்கான சதி திட்டங்களை தீட்டியதாக, பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
கோவை தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த, பயங்கரவாதி அபுபக்கர் சித்திக், 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஆந்திராவில், கடந்த ஜூலை 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.
7 நாள் காவல் மதுரையில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை கொலை செய்ய முயன்றது தொடர்பாக, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், இவரை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
அபுபக்கர் சித்திக் அளித்துள்ள வாக்குமூலம்:
கடந்த, 2011, அக்டோபர் மாதத்தில், அத்வானி ரத யாத்திரை பயணம் மேற்கொள் கிறார் என்ற தகவல் கிடைத்தது.
அந்த மாதத்தில், 28ம் தேதி, மதுரை திருமங்கலம் வழியாக, அத்வானியின் ரத யாத்திரை, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லி புத்துார் செல்வதாகவும் கூறப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் ராஜபாளையத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய பின், மதிய உணவுக்கு திருநெல்வேலி மாவட்டம், தரணி சர்க்கரை ஆலையின் விருந்தினர் இல்லத்திற்கு அத்வானி செல்கிறார் என்ற, தகவலும் எனக்கு வந்து சேர்ந்தது.
இந்த முறை அத்வானியை எப்படியாவது கொன்று விட வேண்டும் என, திட்டம் தீட்டினோம். அதற்கான பணிகளை, நான் தான் முன்னின்று செய்தேன்.
நானே தயாரித்தேன்
இது தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த என் கூட்டாளிகள் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் அண்ணன் தர்வீஸ் மைதீன், மதுரை தெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்த முஸ்தபா, சகாபுதீன் என, 10 பேரை சந்தித்தேன்.
அவர்களுடன் ரகசிய கூட்டம் நடத்தினேன். அத்வானியை கொல்ல, இது தான் சரியான சந்தர்ப்பம். இதை நழுவ விடக் கூடாது என, முடிவுக்கு வந்தோம்.
அத்வானி ரத யாத்திரை, மதுரை திருமங்கலம் அருகே, ஆலம்பட்டி தரைப்பாலத்தை கடந்து செல்ல இருந்தது. இதனால், 'பைப்' வெடிகுண்டு தயாரித்து, அந்த பாலத்திற்கு கீழே வைத்துவிட்டு தப்பித்து விட்டோம். அந்த வெடிகுண்டை நான் தான் தயாரித்தேன்.
போலீசார் எங்கள் சதி திட்டத்தை முறியடித்து, 'பைப்' வெடிகுண்டை செயலிழக்கச் செய்து விட்டனர். அதன் பின்னரும், அத்வானியை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்; ஆனால், நிறைவேறவில்லை.
இதனால், பா.ஜ., பிரமுகர்கள் மற்றும் ஹிந்து தலைவர்களை குறிவைத்து கொலை செய்து வந்தோம். இந்த வழக்குகளில், போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட, 10 பேரும் கைதாகினர். நான் மட்டும் தப்பிச் சென்று விட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.