காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் இந்தியா - பாக்., போராக மாறக்கூடாது: எச்சரிக்கிறார் திருமாவளவன்
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் இந்தியா - பாக்., போராக மாறக்கூடாது: எச்சரிக்கிறார் திருமாவளவன்
UPDATED : ஏப் 26, 2025 08:26 AM
ADDED : ஏப் 26, 2025 05:58 AM

திருச்சி: “பயங்கரவாத தாக்குதலுக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை,” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த வி.சி., கட்சித் தலைவரும், சிதம்பரம் எம்.பி.,யுமான திருமாவளவன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
ஆதங்க வெளிப்பாடு
அதில், எவ்வித அரசியல் உள்நோக்கமும் கிடையாது. அவரை பதவி விலகக் கேட்பது ஆதங்கத்தின் வெளிப்பாடு; அவ்வளவுதான்.
அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்று இருந்த 370வது சட்டப்பிரிவை நீக்கினால், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத செயல்பாடுகள் இருக்காது என, பா.ஜ., தரப்பில் திரும்பத் திரும்பக் கூறினர். சொன்னபடியே, அதை நீக்கவும் செய்தனர்.
அதையடுத்து, காஷ்மீருக்கு யாரும் தைரியமாக சுற்றுலா செல்லலாம் எனவும் ஊக்கப்படுத்தினர். அதை நம்பித்தான், பலரும் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றனர். ஆனால், பாதுகாப்பு அளிக்க வேண்டிய மத்திய அரசு, இந்த விஷயத்தில் சோடை போய்விட்டது.
ஏற்கனவே நடந்த மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று, அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகினார்.
தற்போது, பா.ஜ.,வின் மூத்த தலைவராக இருக்கும் சுப்பிரமணியன் சாமி, காஷ்மீர் பிரச்னையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கூறியுள்ளார். அந்த அடிப்படையில் தான், வி.சி.,க்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாக்., என மோதல் உருவாகி, இருதரப்புக்கும் இடையே போராக மாறி விடக்கூடாது.
உலக நாடுகள் மத்தியில் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் செயல்பாட்டை அம்பலப்படுத்த வேண்டும்.
ஒடுக்கவில்லை
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது, இங்கிருக்கும் மக்களுக்கு எதிரானது அல்ல; மோடி அரசின் செயல்பாடுகளுக்கு எதிரானது.
மத்திய அரசின் செயல்பாடு, பயங்கரவாதத்தை ஒடுக்கவில்லை; தீவிரப்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

