காங்கிரஸ் கவுன்சிலர்கள் மூவருக்கு தங்கபாலு ஏற்படுத்திய புது பிரச்னை
காங்கிரஸ் கவுன்சிலர்கள் மூவருக்கு தங்கபாலு ஏற்படுத்திய புது பிரச்னை
ADDED : ஜூலை 29, 2011 11:46 PM

சென்னை: காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள கவுன்சிலர்கள் மூவரை, சுயேச்சை கவுன்சிலர்களாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கடிதம் எழுதி, புதிய பிரச்னையை உருவாக்கியுள்ளார்.
சட்டசபை தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டி, 18 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்தார்.
அந்த 18 பேரில், சென்னை மாநகராட்சியின் கவுன்சிலர்கள் மங்கள்ராஜ், சாந்தி, செல்லப்பன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். கவுன்சிலர்கள் மூவரையும் காங்கிரஸ் கவுன்சிலர்களாக அங்கீகரிக்கக் கூடாது என்றும், சுயேச்சை கவுன்சிலராகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கடிதத்தை, சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு தங்கபாலு அனுப்பி வைத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக்கடிதம் குறித்து கவுன்சிலர் மங்கள்ராஜ் கூறியதாவது: எங்களை நீக்குவதற்கு தங்கபாலுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. கட்சியிலிருந்து யாரையும் அவரால் நீக்கவும் முடியாது; புதிய பதவிக்கு நியமிக்கவும் முடியாது. தலைவர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்து விட்டார்.
மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலு மனைவி ஜெயந்தி வேட்பு மனு நிராகரிப்பு விவகாரத்தில், தங்கபாலு செய்த தவறுக்கு நான் உடன்படவில்லை. தேர்தல் அதிகாரியிடம் நடந்த உண்மையை தெரிவித்தேன். தேர்தல் அதிகாரியிடம் தங்கபாலுவுக்கு எதிராக நான் சாட்சி அளித்தேன் என்பதற்காக காழ்ப்புணர்வோடு என்னை பழி வாங்கியுள்ளார். நாங்கள் காங்கிரஸ் கவுன்சிலராகத் தான் செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார். இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வரும் நிலையில், காங்கிரஸ் கவுன்சிலர்கள் மூவருக்கு தமிழக காங்கிரஸ் தலைமை சார்பில் அனுப்பிய கடிதம், புது பிரச்னையை உருவாக்கியுள்ளது.