தங்கமணி - முத்துசாமி சந்திப்பு; 'அரசியல் இல்லை' என நழுவல்
தங்கமணி - முத்துசாமி சந்திப்பு; 'அரசியல் இல்லை' என நழுவல்
ADDED : டிச 05, 2025 07:15 AM

பள்ளிப்பாளையம்: ''சுவாமி தரிசனம் செய்யத்தான் நானும் தங்கமணியும் வந்தோம். நீங்க சொல்ற முக்கியமான விஷயம் குறித்து பிறகு பேசுகிறேன்,'' என, அமைச்சர் முத்துசாமி கூறினார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், தாஜ்நகர் பகுதியில் 'கொங்கு திருப்பதி' என அழைக்கப்படும் பெருமாள் கோவில் உள்ளது.
'வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளதால், கோவில் நிலத்தை கையகப்படுத்த வேண்டும்; மீட்கப்பட்ட நிலத்தை ஏலம் விட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து கோவிலை, வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கையகப்படுத்தி தடுப்பு அமைத்து பூட்டினர்.
வழிபாட்டிற்கு கோவிலைத் திறக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த மாதம் 24ம் தேதி, கொங்கு திருப்பதி கோவில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை, 9:40 மணிக்கு, அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் தங்கமணி, கொங்கு திருப்பதி கோவிலுக்கு வந்தார். அடுத்த 10 நிமிடத்தில், தி.மு.க.,வின் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி வந்தார்.
அப்போது, இருவரும் மாறி மாறி வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். பின், இருவரும் இணைந்தே கோவிலுக்குள் சென்று, ஒன்றாக சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இருவரும் பேசியபடியே கோவில் பிரகாரத்தை வலம் வந்தனர்.
பின், கோவிலுக்கு வெளியே வந்த அமைச்சர் முத்துசாமி கூறுகையில், ''முன்னாள் அமைச்சர் தங்கமணி என் நண்பர். இருவரும் ஒன்றாக சுவாமி தரிசனம் செய்தோமே தவிர, வேறு எதுவும் பேசவில்லை.
''கோவிலை முன்னேற்றுவது குறித்து விவாதித்தோம். நீங்கள் கேட்கும் முக்கியமான விஷயம் குறித்து பிறகு பேசுகிறேன்,'' என்றார்.
எதிர்பாராத சந்திப்பு தான் என, இரு தரப்பும் கூறினாலும், இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டு என, இரு கட்சியினரும் பரபரப்பாக பேசுகின்றனர்.

