ADDED : நவ 21, 2024 07:36 PM
புழல்:புழல் சிறையில் இருந்து வெளியே வந்த நடிகை கஸ்துாரி, ''சிறு குரலாக இருந்த என்னை, சீறும் குரலாக மாற்றியவர்களுக்கு நன்றி,'' எனக் கூறியுள்ளார்.
தெலுங்கு மக்களை அவதுாறாக பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்துாரி, அந்த வழக்கில் நேற்று முன்தினம் நீதிமன்றம் வாயிலாக ஜாமின் பெற்றார்.
இந்நிலையில், புழல் சிறையில் இருந்து நேற்று மாலை ஜாமினில் வெளியே வந்த கஸ்துாரிக்கு, அவரது ஆதரவாளர்கள், வாழ்த்து கோஷமிட்டு வரவேற்றனர்.
பின், கஸ்தூரி அளித்த பேட்டி:
என்னை குடும்பம் போல் பாதுகாத்த என் நண்பர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் வித்தியாசம் பாராமல் ஆதரவு அளித்தவர்கள், தமிழகம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மக்களுக்கு நன்றி. புழல் சிறையில் என்னை நன்றாக நடத்தியவர்களுக்கு நன்றி. குறிப்பாக, சிறு குரலாக இருந்த என்னை, சீறும் குரலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
கஸ்துாரி வழக்கறிஞர் கூறுகையில், 'ரிமாண்ட் செய்தபோதே ஜாமின் கேட்டோம்; தரவில்லை. தற்போது, எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து ஜாமின் பெற்றுள்ளோம். நடிகை கஸ்தூரி எங்கும் தலைமறைவாகவில்லை. அவரை வீட்டில் வைத்து தான் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றம் வாயிலாக அவருக்கு உரிய நீதி கிடைத்துள்ளது' என்றார்.