நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்து வரி 6 சதவீதம் உயர்வு: அறிவிப்பே வெளியிடாமல் அமலுக்கு வந்தது
நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்து வரி 6 சதவீதம் உயர்வு: அறிவிப்பே வெளியிடாமல் அமலுக்கு வந்தது
ADDED : மே 03, 2025 04:31 AM

சென்னை: தமிழக அரசின் உத்தரவு அடிப்படையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், மீண்டும் சொத்து வரியை, 6 சதவீதம் உயர்த்தியுள்ளன. அறிவிப்பே வெளியிடாமல், இந்த வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, பிரதான நிதி ஆதாரமாக, சொத்து வரி வசூல் உள்ளது. பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், 2022ல் ஒட்டு மொத்தமாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.
வீடுகளின் பரப்பளவு அடிப்படையில், 25 முதல், 100 சதவீதம் வரை, சொத்து வரி உயர்த்தப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின் ஏற்றப்பட்டதால், பொதுமக்கள் இதை சகித்துக் கொண்டனர். அதன்பின், 2023ல் உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு, 6 சதவீதம் வரை, உள்ளாட்சி அமைப்புகளே, சொத்து வரியை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இதன் அடிப்படையில், பெரும்பாலான நகர்ப்புற உள்ளாட்சிகள், கடந்த ஆண்டில் சொத்து வரியை, 6 சதவீதம் அளவுக்கு உயர்த்தின. தற்போது, 2025 - 26ம் நிதியாண்டு துவங்கியுள்ள நிலையில், வெளிப்படையான அறிவிப்பு இல்லாமல், உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை, 6 சதவீதம் உயர்த்தி உள்ளன. இது, சொத்து வரி செலுத்த செல்வோரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் பி. விஸ்வநாதன் கூறியதாவது:
பொதுவாக, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, சொத்து வரியை சீரமைப்பது ஏற்றுக்கொள்ளும் நடைமுறையாக உள்ளது. அதன்பின், ஒவ்வொரு ஆண்டும், 6 சதவீதம் உயர்த்துவது, வீட்டு உரிமையாளர்களுக்கு, கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக உள்ளது. இவ்வாறு ஆண்டுதோறும் வரியை உயர்த்தினால், ஐந்து ஆண்டுகளில் சொத்து வரி, 30 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து விடும். அதன்பிறகு மீண்டும் ஒட்டுமொத்த சீரமைப்பு என்ற பெயரில், புதிய விகிதங்கள் நிர்ணயிக்கும் போது, வீட்டு உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
சொத்து வரியை தாமதமாக செலுத்துவோருக்கு, அபராதமாக விதிக்கப்படும் வட்டியை, ஒரு சதவீதத்தில் இருந்து, 0.5 சதவீமாக குறைக்க, அரசு முன்வந்துள்ளது. ஆனால், அளவு குறைபாடு காரணமாக, விதிக்கப்படும் அபராதங்கள் விஷயத்தில், வெளிப்படைத்தன்மை இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் விதிக்கப்படும் சொத்து வரி விகிதங்கள், எதன் அடிப்படையில் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை, அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு கூறினார்.