உணவு பொருட்களை அடைத்து விற்பனை செய்ய நீங்கியது தடை
உணவு பொருட்களை அடைத்து விற்பனை செய்ய நீங்கியது தடை
ADDED : ஜன 04, 2024 07:22 AM

சென்னை: பால், எண்ணெய், பால் பொருட்கள், பிஸ்கட்டுகளை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க விதிவிலக்கு அளித்ததை, வாபஸ் பெற்று பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
ஒரு முறை பயன்படுத்தும், 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, அரசு விதித்த தடையை எதிர்த்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
'இந்த தடை உத்தரவு செல்லும்' என, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அமர்வு உத்தரவிட்டது. இதை மறுஆய்வு செய்யக் கோரி, பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம், மனு தாக்கல் செய்தது. மனுவை, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.
அரிசி, பருப்பு, பால், சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை, பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பதற்கு அளிக்கப்பட்டிருந்த விதிவிலக்கை, 2020ல் அரசு வாபஸ் பெற்றது. இதை எதிர்த்து, பிளாஸ்டிக் தயாரிப்பாளர் சங்க நிர்வாகி சாமிநாதன், வழக்கு தொடர்ந்திருந்தார்.
தினசரி பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைப்பதால், அதற்கு தடை விதிப்பது சாத்தியமில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 'பால், பால் பொருட்கள், எண்ணெய், பிஸ்கட், மருந்து பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பதால், 2020ல் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவது சாத்தியமில்லை. 'அதனால், தடை உத்தரவை மாற்ற, அனுமதி அளிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தயாரிப்பாளர் சங்கம் சார்பில், வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, ''தினசரி பயன்படுத்தும் பொருட்களை, பிளாஸ்டிக் உறையில் அடைத்து விற்பதை தடுப்பது சாத்தியமில்லை. அதனால், ஏற்கனவே அளித்த விதிவிலக்கை தொடர, அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து, அன்றாட உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பனை செய்ய, விதிவிலக்கு அளித்த உத்தரவை வாபஸ் பெற்று பிறப்பித்த உத்தரவை, நீதிபதிகள் நிறுத்தி வைத்தனர். இதையடுத்து, அன்றாட உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க, தடை நீங்கியது.