ADDED : அக் 13, 2024 05:28 AM

திருமுருகன்பூண்டியில் உள்ள ராசாத்தாள் குளம் மற்றும் சுற்றுப்புறம் ரம்மியமாக காட்சி தரும் வகையில் பராமரிக்கப்பட்டிருக்கிறது.
திருமுருகன்பூண்டி நகராட்சி எல்லைக்குட்பட்ட ராக்கியாபாளையத்தில், 5.50 ஏக்கர் பரப்பளவில் ராசாத்தாள் குளம் உள்ளது. நொய்யல் கிளை வாய்க்கால் வாயிலாக வரும் மழைநீரில் இக்குளம் நிரம்புகிறது. சமீபத்தில், அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் பெய்யும் மழையால் குளம் நிரம்பி வருகிறது.
பூண்டி நகராட்சி சார்பில், இக்குளம் துார்வாரி சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதோடு, 1.37 கோடி ரூபாய் செலவில் குளத்தை சுற்றி அழகு நடைபாதை மற்றும் தடுப்புவேலி அமைக்கப்பட்டு, ரம்மியமான தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நடைபயிற்சி செய்வோருக்கு உகந்த இடமாக இது மாற்றப்பட்டிருக்கிறது.
900 மரக்கன்று நட திட்டம்
பூண்டி நகராட்சி தலைவர் குமார் கூறியதாவது:
ராசாத்தாள் குளத்துக்கு மட்டுமின்றி, நகரின் பல்வேறு இடங்களில் ஓடும் கழிவுநீரை சேகரித்து, மறு சுழற்சி செய்து வெளியேற்றும் வகையிலான பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்காக, அரசு, 15கோடி ரூபாய் நிதி ஒதுக்கி யுள்ளது. குளத்தை ஆக்கிரமித்திருந்த, 90 சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.
தொடர்ந்து குளக்கரை பலப்படுத்தப்பட்டிருக்கிறது. குளக்கரையை சுற்றி, 900 எண்ணிக்கையில், மண்ணுக்கேற்ற மற்றும் பயன்தரும் மரங்கள் நடப்பட உள்ளன.
இவ்வாறு, குமார் கூறினார்.
நீர்வழித்தடப் பராமரிப்பு அவசியம்
பொதுமக்கள் கூறியதாவது:
ராசாத்தாள் குளம் துார் வாரி சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது; குளத்தை சுற்றி தடுப்புவேலி அமைக்கப்பட்டு, சிறப்புற பராமரிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், குளத்தில் நீர் வரும் வழித்தடங்களில் குப்பை, கழிவுகள் தேங்கி நிற்கின்றன. இதனால், குளத்துக்கு நீர் செல்வது, தடைபடுகிறது. சில ஆண்டுகள் முன், ரோட்டரி நிர்வாகத்தினர் சார்பில், குளத்தின் வழித்தடம் துார்வாரி சுத்தம் செய்யப்பட்டது. அதன்பின், வழித்தட பராமரிப்பு என்பது இல்லை. எனவே, குளம் பராமரிப்பு போன்று, அதன் நீர் வழித்தடங்களையும் பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.