PUBLISHED ON : அக் 02, 2025 12:00 AM
பத்திரிகைகளை அரசாங்கம் அடக்கி ஒடுக்க நினைப்பது வாடிக்கை. வழக்கு, அபராதம், விளம்பர மறுப்பு இன்னும் பலவிதமான தொல்லைகளை கொடுத்து பார்ப்பார்கள். ஒன்று, நம் வழிக்கு வர வேண்டும்; அல்லது பத்திரிகையை மூடிவிட்டு ஓட வேண்டும் என்பதே அதிகாரத்தில் இருப்போரின் எண்ணமாக இருக்கும்.
தினமலருக்கு அத்தகைய அடக்குமுறை தண்ணீர்பட்ட பாடு. வேடிக்கை என்னவென்றால், தினமலரை மெச்சி தலையில் வைத்து ஆடிய தலைவர்களும் கட்சிகளுமே பின்னாளில் இந்த வேலையிலும் இறங்கியதை காணலாம். பாராட்டுக்கு மயங்காத தினமலர், இந்த அடக்கு முறைக்கும் அஞ்சவில்லை.
நியாயமற்ற ஆட்சிக்கு எதிராக ஆரம்பித்ததுதானே தினமலர் பத்திரிகை. தமிழர்கள் பிரிந்து செல்வதை விரும்பாத அப்போதைய திருவிதாங்கூர் முதல்வர் பட்டம் தாணு பிள்ளை, சில அரசியல்வாதிகளை சிறையில் அடைத்து விட்டால் கிளர்ச்சி அடங்கிவிடும் என்று அடக்குமுறையை ஏவி விட்டார்.
அப்போது நிதி அமைச்சராக இருந்த நடராஜபிள்ளை என்பவர் டி.வி.ஆரை சந்தித்து, “தென் திருவிதாங்கூரில் நடைபெறும் தமிழர்களின் பிரிவினை இயக்கம் நியாயமற்றது; அந்த இயக்கத்துக்கு தினமலர் கொடுக்கும் பிரசார ஆதரவு, கிளர்ச்சியாளர்களுக்கு மேலும் பலத்தை கொடுக்கிறது; எனவே ஆதரவு அளிப்பதை தினமலர் கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அதற்கு டி.வி.ஆர்., “என்னை பார்த்து பேசுவதற்கு பதிலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நேசமணியையும் அவருடைய நண்பர்களையும் அழைத்து சமாதானமாக போக வழி காணுங்கள்; உங்கள் சமாதானத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டால், அதை மக்கள் ஏற்குமாறு செய்ய தினமலர் வேண்டியதை செய்யும். மற்றபடி தினமலர் மீது எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
தினமலர் யார் கையில் இருந்தாலும் அவர்களை போலீசார் தாக்கினர். மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டும், சேலைக்குள் மறைத்து எடுத்து சென்றும் தினமலர் படித்தனர் மக்கள். தினமலர் அலுவலகத்தை தாக்கவும் முயற்சி நடந்தது. முதல்வர் தாணு பிள்ளையே தினமலர் அலுவலகத்துக்கு வந்து ராமசுப்பையரை நேரில் மிரட்டி பார்த்தார். எந்த பலனும் இல்லை.
தினமலர் பிரதிகளை சட்ட இலாகாவுக்கு அனுப்பி, தினமலர் ஆசிரியரை கைது செய்ய முடியுமா... அதன் மூலம் தினமலர் பேப்பரையும் முடக்க முடியுமா என்று அரசு ஆலோசித்தது. அப்படி வழக்கு போட முடியாது; போட்டாலும் கோர்ட்டில் நிற்காது என்று சட்ட இலாகா கூறிவிட்டது.
திருநெல்வேலிக்கு வந்த பிறகும் தமிழகம் முழுவதும் கிளைபரப்பி வலர்ந்த நிலையிலும் தினமலர் மீது வெவ்வேறு வடிவங்களில் ஒடுக்குமுறைகள் ஏவப்பட்டன. இன்றுவரை அசராமல், தனது தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல், வாசகர்களை மட்டுமே நம்பி, லட்சிய பயணத்தை தொடர்கிறது தினமலர்.