ADDED : மார் 25, 2024 03:22 AM

என். மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
இந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனக்கு செய்த துரோகம் பற்றி தான் பிரசாரம் செய்யப் போவதாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., கூறி இருக்கிறார்.
'ஜெயலலிதா ஒரு ஊழல் பேர்வழி' என, பா.ஜ., அண்ணாமலை பேசியது, இவருக்கு கோபத்தை ஏற்படுத்தி விட்டதாகவும், அதனால் அண்ணாமலையை, தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும், பா.ஜ., மேலிடத்திடம் முறையிட்டதாகவும், அது நடக்கவில்லை என்றும் இ.பி.எஸ்.,க்கு வருத்தமாம்.
அதனால் வந்த கோபத்தில் தான், பா.ஜ.,வுடன் கூட்டணியை விலக்கிக் கொண்டதாக சொல்கிறார்.
அத்துடன் இந்த தன்மானச் சிங்கம் நிற்கவில்லை... பா.ம.க.,வுடன் அ.தி.மு.க.,வின் கூட்டணி உருவாகும் நேரத்தில், அதை பா.ஜ., கெடுத்து விட்டதாகவும், 'லேட்டஸ்ட்'டாக பழி சுமத்தி இருக்கிறார்.
பல்லடத்தில் நடந்த கூட்டத்தில், எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும், பிரதமர் மோடி, வாயார புகழ்ந்ததை, இ.பி.எஸ்., மறந்து விட்டார் போலும்.
'பன்னீருடன் சேர்ந்து நீங்கள் பணியாற்றினால் தான், தி.மு.க.,வை பலமாக எதிர்க்க முடியும்' என, மோடி சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை இந்த மஹானுபாவர்!
தன்னை முதல்வராக்கிய சசிகலாவை, கட்சியிலிருந்து நீக்கியவரை, கட்சியை எங்கே தன் பக்கம் திருப்பி விடுவாரோ என்று பயந்து, பன்னீர்செல்வத்தை, 'அப்பால்' நகர்த்தியவரை, தி.மு.க.,வுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அண்ணாமலையை, பா.ஜ.,விலிருந்து நீக்கச் சொன்னவரை நம்புபவர்கள் மோசம் போவர் என்பது உறுதி!

