பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம்; இழுபறிக்கு பின் சாதித்தது வாரியம்
பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம்; இழுபறிக்கு பின் சாதித்தது வாரியம்
ADDED : பிப் 13, 2024 08:36 AM

சென்னை: கோவை மாநகராட்சியின் பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டத்தை இழுபறிக்கு பின் நிறைவேற்றி தமிழக குடிநீர் வடிகால் வாரியம் சாதித்துள்ளது.
தமிழக குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக காவிரி, பெண்ணையாறு, பாலாறு, தாமிரபரணி, உள்ளிட்ட பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. புதிதாக, 50க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களை, பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
கோவை மாநகராட்சி மக்களின், அடுத்த 30 ஆண்டு கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டம் முக்கியமானது. இதற்கு அ.தி.மு.க., ஆட்சியில், 2018ல் 740 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ், நிதியுதவி கேட்கப்பட்டது. 2020ல் திட்ட மதிப்பீடு 779 கோடி ரூபாயாக உயர்த்தப் பட்டது. இத்திட்டத்திற்கு அ.தி.மு.க., ஆட்சியில் தேவையான நிலம் கையகப்படுத்தப்படவில்லை. நிதி ஒதுக்கீடும் உறுதியாகவில்லை. அதனால், திட்டம் இழுபறியானது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நிலையில், திட்டம் கைவிடப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தமிழக குடிநீர் வடிகால் வாரியம் எடுத்த முயற்சியால், நிலம் கையகப்படுத்தப்பட்டு, தேவையான நிதி ஒதுக்கீடு பெற்று பணி துவங்கியது. தற்போது, இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதற்காக, பவானி ஆற்றில் சமயபுரம் என்ற இடத்தின் அருகில் உள்ள தடுப்பு ஆணையில் இருந்து, 500 மீட்டர் துாரத்தில் நீர் எடுப்பதற்கு கிணறு அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கிருந்து, 15.4 கி.மீ., துாரத்துக்கு குழாய் அமைத்து, தாண்டிபெருமாள்புரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு முதன்மை நீர்த்தேக்க தொட்டிகளில் சேகரிக்கப்படும் குடிநீர், 117 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் வாயிலாக, கோவை மாநகராட்சி மற்றும் அதன் விரிவாக்க பகுதிகளில் வினியோகம் செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டன் மலையில், 1 கி.மீ., துாரத்துக்கு சுரங்கப்பாதை அமைத்து பன்னிமடையில் உள்ள நீர்சேகரிப்பு தொட்டிக்கு 14.4 கி.மீ.,க்கு குழாய் அமைத்துள்ளனர்.
இதன்வாயிலாக, கோவை மாநகராட்சியில் தற்போது வசிக்கும் 25 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.
இப்பணியை விரைந்து முடிக்க பணியாற்றிய, தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு, நிர்வாக இயக்குனர் தட்சிணாமூர்த்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.