தனியாரிடம் வாங்கப்படும் மின் மீட்டர்கள் விலை வெளியிட்டது வாரியம்
தனியாரிடம் வாங்கப்படும் மின் மீட்டர்கள் விலை வெளியிட்டது வாரியம்
ADDED : டிச 14, 2025 12:39 AM

சென்னை: தனியார் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வாங்கும் ஒருமுனை, மும்முனை மீட்டர்களின் விலையை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
வீடு, கடை, தொழிற்சாலைகளுக்கு மின் வினியோகம் செய்யும் பணியை, மின் பகிர்மான கழகம் மேற்கொள்கிறது.
இந்நிறுவனமே, மின் பயன்பாட்டை கணக்கு எடுப்பதற்கான மீட்டர்களை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, மின் இணைப்புகளில் பொருத்துகிறது.
மீட்டர் கொள்முதல் தாமதம், குறிப்பிட்ட நிறுவன மீட்டர் வாங்க நுகர்வோர் விருப்பம் உள்ளிட்ட காரணங்களால், விண்ணப்பதாரர்களே நேரடியாக தனியார் நிறுவனங்களிடம் இருந்து மீட்டர்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது, எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, மீட்டர் வாங்கலாம் என்ற பட்டியல், www.tnpdcl.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில், ஒருமுனை மீட்டர் விலை, 970 ரூபாயாகவும், மும்முனை மீட்டர், 2,610 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தாழ்வழுத்த தொழில் நிறுவனங்களில், 15 கிலோ வாட் வரை உள்ள மின் இணைப்புக்கான மீட்டர், 6,397.96 ரூபாயாகவும், 35 கிலோ வாட் மேல் உள்ள இணைப்புக்கான மீட்டர், 7,725 ரூபாயாகவும் உள்ளது. உயரழுத்த பிரிவுக்கான மீட்டர் விலை, 30,000 ரூபாயாக உள்ளது.

