காற்றாலைக்கு ரூ.50 லட்சம் கருத்து கேட்கிறது வாரியம்
காற்றாலைக்கு ரூ.50 லட்சம் கருத்து கேட்கிறது வாரியம்
ADDED : செப் 24, 2024 10:37 PM
சென்னை:தமிழகத்தில், கடந்த மாத நிலவரப்படி, 10,900 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. அதில், 9,150 மெகா வாட் தமிழக மின் வாரிய வழித்தடத்திலும், 1,750 மெகா வாட் மத்திய மின் தொடரமைப்பு நிறுவனத்தின் வழித்தடத்திலும் இணைக்கப்பட்டு உள்ளன.
மின் வாரிய வழித்தடத்தில் இணைக்கப்பட்ட மின்சாரம், தமிழகத்திற்குள் பயன்படுத்தப்படுகிறது. மத்திய வழித்தடத்தில் இணைக்கப்பட்டுள்ள மின்சாரம், பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நாட்டில், சில மாநிலங்களில் மட்டுமே காற்றாலை மின் உற்பத்திக்கு சாதகமான சூழல் உள்ளது.
எனவே, தமிழகத்தில் காற்றாலை மின் நிலையம் அமைத்து, மத்திய வழித்தடத்தில் இணைக்கும் நிறுவனங்களிடம் மெகா வாட்டிற்கு, 'ரிசோர்ஸ் சார்ஜ்' என்ற பெயரில், 50 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்க, தமிழக மின் வாரியத்தின் பசுமை எரிசக்தி கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு, முதலீட்டாளர்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், மின்சார ஒழுங்குமுறை ஆணைய அறிவுரைப்படி, இக்கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மின் வாரியம், பொது மக்களிடம் கருத்து கேட்டுள்ளது. மரபுசாரா மின்சார பிரிவு தலைமை பொறியாளரிடம், மின்னஞ்சல் வாயிலாக, அக்., 7ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம்.