'எவ்வளவு மது குடிக்கலாம் என பாட்டிலில் குறிப்பிட முடியாது'
'எவ்வளவு மது குடிக்கலாம் என பாட்டிலில் குறிப்பிட முடியாது'
ADDED : ஜூலை 24, 2025 12:55 AM
சென்னை:'மது பாட்டிலில், எவ்வளவு அளவுக்கு மது குடிக்கலாம் என குறிப்பிடும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது' எனக் கூறி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 'டாஸ்மாக்' கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து, பூரண மதுவிலக்கை அமல்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதா என, ஆய்வு செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வான, ஏ.ஸ்ரீதரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, ''மனுதாரர், இதுதொடர்பாக அளித்த கோரிக்கை மனுவுக்கு விரிவாக பதிலளிக்கப்பட்டு விட்டது.
''மது அருந்துதல் உடல் நலனுக்கு தீங்கு என, மது பாட்டிலில் குறிப்பிட்டுள்ளது. மதுவால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள், 'மது பாட்டிலில், மது உடல் நலனுக்கு தீங்கு என குறிப்பிட்டுள்ள நிலையில், எவ்வளவு அளவு மது குடிக்கலாம் என பாட்டிலில் குறிப்பிடும்படி, அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
'மது கடைகள் எண்ணிக்கையை குறைப்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், இது சம்பந்தமாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது' என தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.