கோவையில் பெண்ணை கொன்று ஏற்காட்டில் உடலை வீசிய கொடூரம்
கோவையில் பெண்ணை கொன்று ஏற்காட்டில் உடலை வீசிய கொடூரம்
ADDED : மார் 25, 2024 04:12 AM

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் கடந்த, 20ல் சந்தேகத்திற்கிடமாக கடும் துர்நாற்றத்துடன் கிடந்த சூட்கேசை, ஏற்காடு போலீசார் திறந்து பார்த்தபோது, அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் இருந்தது.
தனிப்படை போலீசார் சூட்கேஸ் வாங்கிய கோவை கடையில் விசாரணையை துவங்கிய போது, அதை வாங்கிய நடராஜன், 32, என்பவரின் மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவரை போலீசார் தேடிய நிலையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன், அவரது உறவினர் கனிவழகன் நேற்று முன்தினம் ஏற்காடு வி.ஏ.ஓ., மோகன்ராஜிடம் சரணடைந்தனர். ஏற்காடு போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெண்ணை கொன்றது உறுதியானது.
போலீசார் கூறியதாவது: கொலையானது தேனி மாவட்டம், முத்துலாபுரத்தை சேர்ந்த செல்லப்பாண்டி மனைவி சுபலட்சுமி, 33. நடராஜனும், இவரும் கத்தாரில் பணிபுரிந்த போது ஏற்பட்ட பழக்கத்தால், கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் திருமணம் ஆனதை மறைத்து திருமணம் செய்துள்ளனர். இது குறித்து ஏற்பட்ட தகராறில், நடராஜன், சுபலட்சுமியை தாக்கியதில், அவர் இறந்தார். உடலை கனிவழகன் துணையுடன், சூட்கேசில் அடைத்து, கோவையில் இருந்து டிராவல்ஸ் காரில் ஏற்காடு எடுத்து வந்து மலைபாதையில் வீசி உள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.
'லிப்ட்' கொடுத்த மாணவரை தாக்கிய போதை எஸ்.எஸ்.ஐ., துாக்கியடிப்பு
திருச்சி மாவட்டம், வளநாடு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக இருந்தவர் இளங்கோ, 49. இவர், நேற்று முன்தினம் காலை, ஊனையூரில் நடந்த தேரோட்டத்துக்கு பாதுகாப்பு பணிக்கு சென்றார்.
அங்கு மது குடித்து விட்டு, மீண்டும் ஸ்டேஷனுக்கு பைக்கில் வந்தார். வழியில், குரும்பப்பட்டி என்ற இடத்தில் அவரால் பைக்கை ஓட்ட முடியவில்லை. இதனால், பைக்கை நிறுத்தி விட்டு, அங்கே கிடந்த கட்டிலில் படுத்திருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த, 19 வயது கல்லுாரி மாணவரை நிறுத்தி, தன்னை வளநாடு போலீஸ் ஸ்டேஷனில் விடுமாறு கேட்டார்.
மாணவரும் பைக்கில் எஸ்.எஸ்.ஐ.,யை ஏற்றி வந்து, ஸ்டேஷன் வாசலில் இறக்கி விட்டார். அப்போது மாணவனை ஸ்டேஷனுக்குள் அழைத்த எஸ்.எஸ்.ஐ., இளங்கோ, அந்த மாணவரை போதையில் தாக்கினார்.
இதுகுறித்து, மாணவர் தன் குடும்பத்தாருக்கு தகவல் தர, 50க்கும் மேற்பட்டோர் வளநாடு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். மணப்பாறை டி.எஸ்.பி., மரியமுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போதையில் இருந்த எஸ்.எஸ்.ஐ., இளங்கோவை, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
அவர் பணியில் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டதால், ஆயுதப்படைக்கு மாற்றி, திருச்சி எஸ்.பி., வருண்குமார் உத்தரவிட்டார்.
சிறுமிக்கு குழந்தை: அக்கா கணவர் சிக்கினார்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்தவர், 31 வயது கூலித்தொழிலாளி. இவருக்கு ஆண் குழந்தை உள்ளது. இவரது மனைவியின், 17 வயது தங்கையிடம், தொழிலாளி நெருங்கி பழகியதில், சிறுமி கர்ப்பமானார்.
கடந்த வாரம் சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, 21ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
சிறுமிக்கு குழந்தை பிறந்ததால், மருத்துவமனை சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வந்தவாசி மகளிர் போலீசார், கூலித்தொழிலாளியை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.
போலீஸ் என கூறி ரயிலில் 316 கிராம் தங்கம் பறிப்பு
கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்தவர் சுதேஷ், 41; இவர், சென்னை மற்றும் பெங்களூருவில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் பணியாற்றுபவர் ராகுல், 30. இரு நாட்களுக்கு முன், 300 கிராம் தங்கக்கட்டி, 16 கிராம் தங்க காசு என, 316 கிராம் தங்கத்துடன், திருச்சூரிலிருந்து சென்னையிலுள்ள நகைக்கடைக்கு, ராகுல் பெங்களூரு மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார்.
ரயிலில் போலீஸ் எனக்கூறி வந்த இருவர், ராகுலை சோதனையிட்டு, அவரது சட்டை பாக்கெட்டிலிருந்த தங்கத்தை எடுத்தனர். தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள போது, ஆவணமின்றி தங்கத்தை எப்படி எடுத்து வரலாம் என, கேள்வி எழுப்பினர். பின், விசாரணை நடத்த வேண்டும் என, காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ராகுலுடன் இறங்கினர். அவரது மொபைல் போனை வாங்கிக் கொண்டு, அங்கேயே இருக்குமாறு கூறிச் சென்றனர்.
நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால், ஏமாற்றப்பட்டதை அறிந்த ராகுல், அவ்வழியாக சென்னை சென்ற மற்றொரு ரயிலில் ஏறி, சென்னை சென்று, தங்கம் பறிபோனது குறித்து சுதேஷிடம் கூறினார். காட்பாடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
மகளுக்கு தொல்லை; போக்சோவில் தந்தை கைது
சென்னை, அமைந்தகரையை சேர்ந்த, 42 வயது டிரைவர், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு மகள் உள்ளார்.
கருத்து வேறுபாடால், 17 வயது மகளுடன், ஆரணி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வாடகை வீட்டில் தாய் வசிக்கிறார். கணவரும் அதே பகுதியில் தனியாக வாடகை வீட்டில் வசிக்கிறார். அவ்வப்போது மகளை பார்க்க, மனைவி வீட்டிற்கு சென்று வந்தார்.
மனைவி இல்லாத நேரத்தில் மகளை பார்க்க சென்ற அவர், பெற்ற மகளுக்கு அவ்வப்போது பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்த தாய் புகார்படி, ஆரணி அனைத்து மகளிர் போலீசார் நேற்று, சிறுமியின் தந்தையை போக்சோவில் கைது செய்தனர்.
மனைவியை கொன்றவர் 7 மாதங்களுக்கு பின் கைது
கடலுார் மாவட்டம், ஆலம்பாடியை சேர்ந்தவர் மாமலைவாசன், 27; ஜே.சி.பி., டிரைவர். இவர், ஓராண்டிற்கு முன் திட்டக்குடி அருகே தாழைநல்லுாரை சேர்ந்த அபிநயா, 18, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமானது முதல், போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த ஆண்டு ஆக., 18ம் தேதி இரவு, ரத்த வாந்தி எடுத்த நிலையில் வீட்டில் அபிநயா மயங்கி கிடந்தார். மறுநாள் காலையில் பார்த்த அக்கம் பக்கத்தினர், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
மருத்துவக் குழுவினர் சோதித்ததில் அவர் இறந்தது தெரிந்தது. அபிநயா தந்தை ராஜவேல், மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக மருதுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்தனர். பிரேத பரிசோதனையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
போலீசார் சந்தேக மரணம் வழக்கை, கொலை வழக்காக மாற்றி, தலைமறைவாக இருந்த மாமலைவாசனை தேடினர். ஏழு மாதங்களுக்கு பின் நேற்று, சொந்த ஊருக்கு வந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
ரூ. 23.90 லட்சம் மோசடி; 10 பேர் மீது வழக்கு
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் பூங்கொடி 38. இவர் சர்வ ஜன சேவா கோஷ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஏஜன்டாக பணியாற்றினார்.
இவர் 2023 நவ. 15ல் 86 பயனாளிகளிடம் இருந்து வசூல் செய்த பணத்தில் ரூ. 82 ஆயிரத்து 541 சென்னை தலைமையகத்திற்கு செலுத்தி விட்டதாக கூறியது பொய் என தணிக்கையில் தெரியவந்தது.
மேலும் இவர் தனது உறவினர்கள் கனகவேல், பிரியா மகாலட்சுமி, மாரியப்பன், பூஜா, சுபாஷ், அழகுராணி, வெற்றிவேல் ராம்ஜி, தங்கமாரி, செல்லையா ஆகியோருக்கு போலி ஆவணங்கள் மூலம் ரூ. 11 லட்சத்து 80 ஆயிரத்தை கடனாக பெற்று கொடுத்துள்ளார்.
மேலும் 43 பயனாளிகளிடம் வசூல் செய்த ரூ. 11 லட்சத்து 28 ஆயிரத்து 315 கையாடல் செய்ததை அறிந்த மண்டல மேலாளர் சாந்தி, போலீசில் புகார் அளித்தார். பூங்கொடி உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் குறித்து அவதுாறு: அமைச்சர் மீது வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தண்டுபத்து கிராமத்தில் மார்ச் 22 இரவில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் ''பிரதமர் மோடி சேலம் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது காமராஜர் ஏதோ இவரை கட்டி அணைத்தது போல பேசுகிறார்''எனக் கூறி ஆபாசமான வார்த்தைகளை கூறினார்.
தி.மு.க., எம்.பி., கனிமொழி முன்னிலையில் அமைச்சரின் பேச்சு சர்ச்சையானது. பா.ஜ., மாவட்ட தலைவர் சித்ராங்கதன், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் அவதுாறு வழக்குப்பதிவு செய்தனர்.
ஐ.எஸ்., அமைப்பில் சேர சென்ற மாணவன் கைது
டில்லியின் ஓக்லா என்ற பகுதியைச் சேர்ந்த மாணவர், வட கிழக்கு மாநிலமான அசாமில் உள்ள, ஐ.ஐ.டி., குவஹாத்தியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேரப் போவதாக, அந்த மாணவன் போலீசாருக்கு இ - மெயிலில் தகவல் அனுப்பினார்.
இதை உறுதிப்படுத்துவதற்காக, ஐ.ஐ.டி., குவஹாத்தி நிர்வாகத்தினரை, போலீசார் தொடர்பு கொண்ட போது, சம்பந்தப்பட்ட மாணவரை மதியத்தில் இருந்து காணவில்லை என்றும், அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், குவஹாத்தியில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ள ஹாஜோ என்ற இடத்தில், அந்த மாணவரை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விடுதியில் அந்த மாணவர் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்திய போலீசார், ஐ.எஸ்., அமைப்பின் கொடியை பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.

