அரசு கேபிள் "டிவி' கட்டுப்பாட்டில் தனியார் கட்டுப்பாட்டு அறைகள்
அரசு கேபிள் "டிவி' கட்டுப்பாட்டில் தனியார் கட்டுப்பாட்டு அறைகள்
ADDED : ஆக 25, 2011 11:42 PM

சென்னை : அரசு கேபிள் 'டிவி'யில் இணைவதற்கு, 35 ஆயிரத்து 30 கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் பதிவு செய்துள்ளனர்.
11 மாவட்டங்களில் உள்ள, தனியார் இயக்குபவர்களின் கட்டுப்பாட்டு அறைகளை, இந்நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர உள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில், நான்கு இலக்கமுறைத் தலைமுனைகளும் (டிஜிடல் ஹெட் எண்ட்), விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் ஒரு தொடர்முறைத் தலைமுனையும் (அனலாக் ஹெட் எண்ட்) நிறுவப்பட்டன. பின்னர், இந்நிறுவனம் முழுமையாகச் செயல்படாமல் முடங்கியது.
அரசு கேபிள் 'டிவி'யை மறுசீரமைத்தல் மற்றும் விரிவாக்குதலுக்காக, இந்நிறுவனத்துக்கு தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரை, அரசு நியமனம் செய்துள்ளது. முன்பணமாக, மூன்று கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தில் சேர்வதற்கு, தனியார் ஆபரேட்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்பட்டது. பதிவு செய்து கொள்ள வரையறுக்கப்பட்ட கடைசி நாள் வரை, 35 ஆயிரத்து 30 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களும், 2,640 பன்முக ஏற்பாட்டுத் துறை இயக்குபவர்களும் (எம்.எஸ்.ஓ.,) பதிவு செய்துள்ளனர். மொத்தமுள்ள 40 ஆயிரம் கேபிள் ஆபரேட்டர்களில் 94 சதவீதம் பேர், அரசு கேபிள் நிறுவனத்தில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள இலக்கமுறைத் தலைமுனைகள், மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், 16 மாவட்டங்களில், புதிய தொடர்முறைத் தலைமுனைகள் நிறுவப்பட்டு வருகின்றன. 11 மாவட்டங்களில், தற்போதுள்ள தனியார் இயக்குபவர்களின் கட்டுப்பாட்டு அறைகளை, இந்நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, கேபிள் சேவைகளை வழங்க உத்தேசித்துள்ளது. தங்களுக்கென, தனியாகக் கட்டுப்பாட்டு அறைகளைக் கொண்டுள்ள, பல பன்முக ஏற்பாட்டுத் துறை இயக்குபவர்களும், தங்களுடைய கட்டுப்பாட்டு அறைகளை, அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்துக்குத் தர விருப்பம் தெரிவித்துள்ளனர். மிக விரைவில், அரசு கேபிள் 'டிவி' சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு, தமிழக அரசு தெரிவித்துள்ளது.