UPDATED : ஏப் 17, 2024 06:06 PM
ADDED : ஏப் 16, 2024 11:54 PM

சென்னை: லோக்சபா தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6:00 மணியுடன் நிறைவடைந்தது.
லோக்சபா தேர்தல் வரும், 19ம் தேதி துவங்கி, ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டமாக, அருணாச்சல பிரதேசம் -- 2, அசாம் - 5, பீஹார் - 4, சத்தீஸ்கர் - 1, ம.பி., - 6, மஹாராஷ்டிரா - 5, மணிப்பூர் - 1, மேகாலயா - 2, மிசோரம் - 1, நாகாலாந்து - 1, ராஜஸ்தான் - 12, சிக்கிம் - 1, தமிழகம் - 39, திரிபுரா - 1, உ.பி., - 8, உத்தரகண்ட் - 5, மேற்கு வங்கம் - 3, அந்தமான் நிகோபார் தீவுகள் - 1, ஜம்மு காஷ்மீர் - 1, லட்சத்தீவு - 1, புதுச்சேரி - 1 என, 21 மாநிலங்களில் உள்ள, 102 லோக்சபா தொகுதிகளில், 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்தத் தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., இறுதிக்கட்டமாக சேலத்தில் வாகனப் பேரணியாக சென்று ஓட்டு சேகரித்தார்.
பா.ம.க., தலைவர் அன்புமணி, தர்மபுரியில் போட்டியிடும் அவரது மனைவி சவுமியாவை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார்.
சென்னை மஹாத்மா காந்தி சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கோவையில், அமைச்சர் உதயநிதியும், நீலகிரி தொகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகனும், கோவையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும், சென்னை புரசைவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், தூத்துக்குடி எட்டயபுரத்தில் கனிமொழியும் கடைசிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார்.
முன்னதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், வரும் 19ம் தேதி காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும்.
இன்று மாலை 6:00 மணி முதல் ஓட்டுப்பதிவு முடிவடையும் வரை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின்படி அமலில் உள்ள விதிமுறைகள் விபரம்:தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்றவற்றை, யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அதில் பங்கேற்கவோ கூடாது
எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், 'டிவி', எப்.எம்.ரேடியோ, வாட்ஸாப், முகநுால், எக்ஸ் போன்றவற்றின் வழியாக, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கக் கூடாது. எஸ்.எம்.எஸ்., மற்றும் இணையம் உட்பட, அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்புகளும், இதில் உள்ளடங்கும்
பொதுமக்களில் யாரையும் ஈர்க்கும் வகையில், இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு அல்லது பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்தி, யாரும் பரப்புரை செய்யக் கூடாது
இந்த விதிமுறைகள் மீறப்பட்டால், சட்டப்படி இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்
தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் போன்றோர், அத்தொகுதி வாக்காளர் அல்லாதோர், இன்று மாலை 6:00 மணிக்கு மேல், அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்
திருமண மண்டபம், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில், வெளியாட்கள் யாரேனும் தங்கி உள்ளனரா என்பது கண்டறியப்படும்
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட, வாகன அனுமதிகள், இன்று மாலை 6:00 மணிக்கு மேல் செயலற்றதாகி விடும்
வேட்பாளர், தேர்தல் முகவர் ஆகியோர் பயன்பாட்டிற்கு, தொகுதிக்கு ஒரு வாகனம்; தொகுதியில் அடங்கியுள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்காக, தேர்தல் முகவர் அல்லது அவரது பணியாளர்கள் அல்லது கட்சிப் பணியாளர்களின் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் ஆகியவற்றுக்கு, தேர்தல் நடத்தும் அதிகாரியால் அனுமதி வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

