'மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களே தமிழக அரசின் செயல்பாட்டுக்கு சாட்சி'
'மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களே தமிழக அரசின் செயல்பாட்டுக்கு சாட்சி'
ADDED : அக் 17, 2024 09:58 PM

பள்ளிக்கரணை:தென் சென்னை, வார்டு 189க்கு உட்பட்ட பள்ளிக்கரணை, காமகோட்டி நகர், சாய் பாலாஜி நகரில், மழைநீர் தேங்கியுள்ளது.
இப்பகுதிகளை பா.ஜ., முன்னாள் நிர்வாகி தமிழிசை, பார்வையிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
சென்னையில் பிரதான சாலையில் மட்டுமே நீர் தேங்கவில்லை. உட்புற பகுதியில் இப்போதும் முட்டி கால் அளவுக்கு நீர் வடியாமல் உள்ளது. அதில் சாக்கடையும் கலந்துள்ளது.
ஆனால், காய்ந்த சாலைகளும், வடிந்த வெள்ளமும்தான் வெள்ளை அறிக்கை என உதயநிதி, ஒரு சீரியஸான விஷயத்தை விளையாட்டுப் பிள்ளையாக கூறியுள்ளார். அப்படி பேசும் உதயநிதியிடம் வேறு என்னத்தை எதிர்பார்க்க முடியும். உதயநிதி கூறுவது வெள்ளையறிக்கை அல்ல; குற்ற அறிக்கை.
தி.மு.க., அரசு, கடந்த மூன்றரை ஆண்டு ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை. ஒரு பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகள், வசிக்கும் மக்கள், பயன்பாட்டில் உள்ள கார்கள் எண்ணிக்கை ஆகியவற்றையெல்லாம் வைத்து, மக்கள் சிரமமின்றி வாழ்வதற்கான எந்த ஒரு திட்டத்தையும் தி.மு.க., அரசு வகுக்கவில்லை.
அதற்கெல்லாம் ஒரு தொலை நோக்குத் திட்டம் வேண்டும். அப்படியொரு பார்வையும், திட்டமும் தி.மு.க., அரசிடம் இல்லவே இல்லை; அனைத்திலும் அறிவியல் பார்வை இல்லை; அரசியல் பார்வைதான் உள்ளது. செய்யாத பணிகளை செய்து முடித்ததுபோல், 'மார்கெட்டிங்' செய்வது மட்டும்தான் நடக்கிறது.
கடந்த ஆண்டு, மழை வருவதற்கு முன் 4,000 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள வடிகால்கள் நன்றாக வேலை செய்கின்றன என்றனர். ஆனால், மழை பெய்தபோது என்ன நடந்தது என்பது பிறந்த குழந்தைக்கும் தெரியும்.
தற்போது, தமிழக முதல்வரே 30 சதவீத வடிகால் பணிகள் இன்னும் முடியவில்லை என பேட்டி அளித்துள்ளார்.
தாம்பரம் மாநகராட்சியிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கேட்ட கேள்விக்கு, 40 சதவீத வடிகால் பணிகள் முடியவில்லை என, பதில் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் இதே நிலைமைதான்.
சென்னையில் 10 முதல் 20 செ.மீ., மழைக்கே நீர் தேங்குகிறது என்றால், மழை அதிகமாக பெய்தால் என்னவாகும்? மக்கள், தி.மு.க.,விற்கு ஓட்டளித்தனர். பதிலாக, இந்த அரசு மக்கள் மழை நீரில் இருந்து தப்பிக்க படகு அளிக்கிறது.
நீர் மேலாண்மை அறிவியல் பூர்வமானது. தி.மு.க., அரசிடம் அது குறித்த புரிதல் இல்லை. மழைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம். ஆனால், மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதைவிட கேவலம் எங்கும் உண்டா?
இந்த அரசு மீது, மக்கள் எப்படிப்பட்ட நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கும், அரசின் செயல்பாட்டு லட்சணத்துக்கும் வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களே சாட்சி.
இவ்வாறு அவர் கூறினார்.