தமிழக சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.170 கோடி மத்திய அரசு ஒதுக்கியது
தமிழக சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.170 கோடி மத்திய அரசு ஒதுக்கியது
ADDED : நவ 29, 2024 11:44 PM
சென்னை:சிறப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ், மாமல்லபுரத்தில், நந்தவனம் பாரம்பரிய பூங்கா; நீலகிரி மாவட்டம், தேவாலாவில் பூந்தோட்டம் அமைக்க, மத்திய அரசு, 170 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
'தமிழக சுற்றுலாத்துறை சார்பில், பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற, 4,574 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரிடம், தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று முன்தினம் கோரிக்கை மனு அளித்தார்.
இந்நிலையில், மத்திய சுற்றுலாத்துறை சார்பில், மூலதன முதலீட்டுக்கான சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ், தமிழகம், கோவா உள்ளிட்ட 23 மாநிலங்களில், 3,295 கோடி ரூபாய் மதிப்பில், 40 திட்டங்களை செயல்படுத்த, நிதி வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, மாமல்லபுரத்தில் அமைய உள்ள, 'நந்தவனம் பாரம்பரிய பூங்கா' திட்டத்திற்கு 99.67 கோடி; நீலகிரி மாவட்டம் தேவாலாவில் அமைய உள்ள, மலர் பூந்தோட்டம் திட்டத்திற்கு, 70.23 கோடி என, மொத்தம் 170 கோடி ரூபாய் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தின் இரண்டு திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
'நந்தவனம் பாரம்பரிய பூங்கா' திட்டத்தின்படி, மாமல்லபுரம் திருவிடந்தை பகுதியில், ஹிந்து அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான, 211 ஏக்கர் நிலத்தில், கோவில்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானம், புகழ்பெற்ற சின்னங்கள் என, நான்கு பகுதிகளில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இப்பூங்காவில், பிரசித்தி பெற்ற தமிழக கோவில்களின் மாதிரி, சிறு தெய்வங்களின் கோவில், நவக்கிரக கோவில், கலை அரங்கம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை.
முத்ரா உருவங்கள், சிறுவர் பூங்கா, அமைதி பூங்கா, கோவில் ஸ்தல விருட்சம், விளையாட்டு மைதானம், மலர் பூந்தோட்டம் உள்ளிட்டவை அமைய உள்ளன.
நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில், மலர் பூந்தோட்டம் அமைக்கப்பட உள்ளது. இதில், உணவுக்கூடம், படகு இல்லம், கண்ணாடி இல்லம், அரியவகை மலர்கள் அடங்கிய கண்காட்சி கூடம், சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம் போன்றவை இடம் பெற உள்ளன.
இவ்வாறு, அவர்கள் கூறினார்.