வளர்ந்த மாநிலம் என்பதால் தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய அரசு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
வளர்ந்த மாநிலம் என்பதால் தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய அரசு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
ADDED : அக் 17, 2025 10:31 PM
சென்னை:வளர்ந்த மாநிலம் என்பதால், தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாகவும், உ.பி.,க்கு மூன்று மடங்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாகவும், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டசபையில் , துணை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அவர் பேசியதாவது:
தமிழகத்திற்கான, 4,000 கோடி ரூபாய் கல்வி நிதியை மத்திய அரசு தரவில்லை. பல்வேறு போராட்டங்களுக்குப் பின், இப்போது, கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான, 450 கோடி ரூபாயை மட்டும் விடுவித்துள்ளது.
போராடுவோம் மத்திய அரசு திட்டமிட்டே இந்த நிதியை தராததால், பள்ளிகளில் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி, இரக்கப்பட்டு தருவது அல்ல; அது தமிழகத்தின் உரிமை. இதற்காக இறுதிவரை போராடுவோம்.
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தில், மத்திய அரசின் பங்கான, 3,407 கோடி ரூபாய் வழங்கப்படவில்லை. தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்க மறுப்பது, அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சி.
நிதியாண்டு 2024- - 25ல் மத்திய அரசு, 50,655 கோடி ரூபாயில், எட்டு அதிவேக நெடுஞ்சாலை திட்டங்களை அறிவித்தது. அதில் உ.பி., குஜராத், மஹாராஷ்டிராவுக்கு மட்டும், 38,207 கோடி ரூபாயில், ஐந்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டன; தமிழகத்திற்கு ஒன்றுகூட இல்லை.
வளர்ச்சி அடைந்த மாநிலம் என்ற ஒரே காரணத்திற்காக, தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இது வளர்ந்த பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்தை நிறுத்துவது போல உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழகத்திற்கு, 27,986 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
ஆனால், உ.பி.,க்கு தமிழகத்தை விட மூன்று மடங்கு அதிகமாக, 81,803 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்தியா ஒரு கூட்டாட்சி அமைப்பாக இருக்க வேண்டுமானால், அனைத்து மாநிலங்களும் சமமாக பார்க்கப்பட வேண்டும்.
ரூ.2.63 லட்சம் கோடி ரயில்வே திட்டங்களிலும் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. கடந்த மூன்றாண்டுகளில், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட ரயில்வே நிதி, 19,068 கோடி ரூபாய். ஆனால், உ.பி.,க்கு 2025 - -2026ல் மட்டும், 19,858 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
ஒன்பதாவது நிதி குழுவில், தமிழகத்திற்கான நிதி பகிர்வு 7 சதவீதமாக இருந்தது. 15வது நிதி குழுவில், 4.08 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு சுமார் 2.63 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகையில், தமிழகம் 6.124 சதவீதம். ஆனால், 4 சதவீத நிதி பகிர்வுதான் கிடைக்கிறது. 2014 முதல் 2024 வரை, தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு, 7.5 லட்சம் கோடி ரூபாய் கிடைத்து உள்ளது.
ஆனால், 2.85 லட்சம் கோடி ரூபாய் தான் நமக்கு கொடுத்துள்ளனர். ஆனால், 3.07 லட்சம் கோடி ரூபாய் கொடுத்த உ.பி.,க்கு, 10 லட்சம் கோடி ரூபாயை கொடுத்து உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

