எங்கள் ஆட்சியை விமர்சிக்க முதல்வருக்கு தகுதியில்லை; இ.பி.எஸ்., பாய்ச்சல்
எங்கள் ஆட்சியை விமர்சிக்க முதல்வருக்கு தகுதியில்லை; இ.பி.எஸ்., பாய்ச்சல்
UPDATED : டிச 06, 2024 03:18 PM
ADDED : டிச 06, 2024 03:15 PM

சென்னை: 'அ.தி.மு.க., ஆட்சியில் புயலின் போது நடவடிக்கை எடுக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் தவறான கருத்துகளை கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. எங்கள் ஆட்சியை விமர்சிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
இது குறித்து, சமூகவலைதளத்தில், இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் புயலின் போது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என தவறான கருத்துக்களை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது உண்மைக்கு புறம்பான கருத்து. பல புயல்களை அ.தி.மு.க., சிறப்பாக கையாண்டது. ஒன்றுமே தெரியாதது போல், அ.தி.மு.க., ஆட்சியில் புயலின் போது நடவடிக்கை எடுக்கவில்லை என தவறான கருத்துகளை கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. எங்கள் ஆட்சியை விமர்சிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 67 உயிர்கள் மரணித்த வழக்கை அ.தி.மு.க.,வின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ., விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மடியில் கனத்துடன் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏன் இந்த அரசு சி.பி.ஐ., விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லை.
வழக்கு நியாமான முறையில் நடக்க வேண்டும் என்றால் சி.பி.ஐ., விசாரித்தால் தான் மக்களுக்கு நியாயம் கிடைக்கும். உண்மையை வெளிகொண்டு வருவதற்கு தான் உயர்நீதிமன்றம் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, இந்த அரசு செயல்பட்டு அப்பாவி ஏழை மக்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தால், சி.பி.ஐ., விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.