அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியால் முதல்வருக்கு ஜுரம்; நயினார் நாகேந்திரன்
அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியால் முதல்வருக்கு ஜுரம்; நயினார் நாகேந்திரன்
ADDED : ஜூலை 10, 2025 01:54 PM

மதுரை: 'அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைந்த பிறகு முதல்வர் ஸ்டாலினுக்கு ஜுரம் வந்து விட்டது. தோல்வி பயம் வந்து விட்டது,' என்று பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; சுங்கச்சாவடிகளில் மட்டுமல்ல டீசல், பெட்ரோல் போடுவதிலேயே கோடிக்கணக்கான ரூபாயை போக்குவரத்து கழகம் பாக்கி வைத்துள்ளது. முதல்வர் தான் அரசு போக்குவரத்து கழகத்திற்கு மானியத்தை கொடுத்து, பிரச்னை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் முதல்வரின் வேலை. இதனால், போக்குவரத்து கழகங்கள் பாதிக்கப்படுகிறது.
தமிழகம் இங்க தானே இருக்கிறது. எதுக்காக ஓரணியில் தமிழகம் பயணம். அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைந்த பிறகு முதல்வர் ஸ்டாலினுக்கு ஜுரம் வந்து விட்டது. தோல்வி பயம் வந்து விட்டது.
நேற்று அம்பாசமுத்திரம் பகுதியில் போதைப்பொருள் பயன்படுத்தி நபர் 17 வயது சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். வள்ளியூரில் மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்டுள்ளார். தினசரி இதுபோன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளது. இதனை எல்லாம் மறைப்பதற்காக, ஓர் அணியில் தமிழகம் என்று சும்மா ஒரு பேனரை வைத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று வருகிறார். இதனால், தமிழகத்திற்கு ஒரு நன்மையும் கிடையாது. நிச்சயமாக 2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்.
முதல்வருக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. இபி.எஸ்., பேச வேண்டிய கருத்தை தான் பேசியுள்ளார். டம்மி வாய்ஸாக இருக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.
வைகோ எப்போதுமே அதிகமாக கோபப்படுவார். பத்திரிகையாளர் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. வருந்தத்தக்கது. பத்திரிகையாளர்கள் தன் கண்டனக் குரலை எழுப்ப வேண்டும்.
மதுரையில் நடந்த முருகன் மாநாட்டின் 6வது நாளில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். தி.மு.க., மாநாடு நடத்தினால் டாஸ்மாக்கில் தான் கூட்டம் வரும். கூட்டம் நடந்து முடிந்தவுடன் இருக்கைகளை அடுக்கி வைத்து விட்டு சென்றனர். முருகன் மாநாட்டிற்கு உலகமே பாராட்டி வருகிறது. தனியொரு மனிதன் பேசுவதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது, இவ்வாறு அவர் கூறினார்.