மீனவர்களுக்கு இன்னும் உயர்வான திட்டங்கள் அடுத்த ஆட்சியில் வரும் என்கிறார் முதல்வர்
மீனவர்களுக்கு இன்னும் உயர்வான திட்டங்கள் அடுத்த ஆட்சியில் வரும் என்கிறார் முதல்வர்
ADDED : நவ 22, 2025 01:09 AM

சென்னை: “அடுத்த ஆண்டு அமையவுள்ள, 'தி.மு.க., 2.0' ஆட்சியில், மீனவர்களுக்காக இன்னும் உயர்வான திட்டங்கள் செயல்படுத்தப்படும்,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் நடந்த உலக மீனவர் நாள் விழாவில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சட்டசபையில் கச்சத்தீவை மீட்க, மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். நமது கோரிக்கையை, மத்திய பா.ஜ., அரசு செயல்படுத்த தயாராக இல்லை. எனவே, மீனவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்ய வேண்டும் என, 576 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை, மன்னார் வளைகுடா மீனவர்களுக்கு அறிவித்தேன்.
குளச்சல் துறைமுகத்தை, 350 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யவேண்டும் என, மத்திய நிதி அமைச்சருக்கு, கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளேன்.
நாட்டிலேயே முதல் முறையாக, திருவொற்றியூரில் சூரை மீன்பிடி துறைமுகம் திறக்கப் பட்டுள்ளது. மீனவர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை, கடந்த நான்கரை ஆண்டுகளில் செயல் படுத்தி உள்ளோம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும், 567 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் வரை வந்தாலும், மீனவர்களை சந்திக்க, பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை.
நான் அப்படி அல்ல; கடலோர மாவட்டங்களுக்கு, எப்போது சென்றாலும், மீனவர் சங்கப் பிரதிநிதிகளை சந்திக்கிறேன். மீனவர்கள் எப்போது வேண்டுமானாலும், தலைமைச் செயலகத்தில் என்னை சந்திக்கலாம் என்ற அளவுக்கு, நெருக்கமான அரசாக தி.மு.க., அரசு இருக்கிறது.
அடுத்த ஆண்டு அமையவுள்ள, 'தி.மு.க., 2.0' ஆட்சியில், மீனவர்களுக்காக இன்னும் உயர்வான திட்டங்கள் செயல் படுத்தப்படும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

