மயிலாடுதுறையில் அரசு விழா ரயிலில் சென்றார் முதல்வர்
மயிலாடுதுறையில் அரசு விழா ரயிலில் சென்றார் முதல்வர்
ADDED : மார் 04, 2024 05:33 AM

சென்னை : மயிலாடுதுறையில் இன்று நடக்கவுள்ள அரசு விழாவில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று ரயிலில் புறப்பட்டு சென்றார்.
மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் பகுதியில், இன்று காலை 10:00 மணிக்கு அரசு விழா நடக்கிறது.
அதில் முதல்வர் பங்கேற்று, மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலக வளாகம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார்.
புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, சிறப்புரையாற்ற உள்ளார்.
இதில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, மாலை 4:10 மணிக்கு திருச்செந்துாருக்கு புறப்பட்ட பயணியர் எக்ஸ்பிரஸ் ரயிலில், தனிப்பெட்டியில் புறப்பட்டு சென்றார்.
அவருடன், அவரது மனைவி துர்காவும் சென்றார். இரவு 8:15 மணிக்கு சீர்காழி ரயில் நிலையத்தில் இறங்கினார்.
அங்கிருந்து சாலை வழியாக திருவெண்காடு சென்று அங்கு தங்கினார். இன்று அரசு விழாவில் பங்கேற்ற பின், பகல் 1:10 மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து, சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்ப உள்ளார்.

