கோவை திட்ட ஆவணங்கள் வெளிப்படையாக உள்ளன 'ஜி ஸ்கொயர்' நிறுவனம் விளக்கம்
கோவை திட்ட ஆவணங்கள் வெளிப்படையாக உள்ளன 'ஜி ஸ்கொயர்' நிறுவனம் விளக்கம்
ADDED : செப் 18, 2026 02:36 AM
சென்னை: 'கோவை திட்டத்தில், எந்தவித புறம்போக்கு நிலங்களும் இல்லை; இது தொடர்பான ஆவணங்கள் வெளிப்படையாக உள்ளன' என, 'ஜி ஸ்கொயர்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
எங்கள் நிறுவனம் கோவையில், 722 ஏக்கர் நிலத்தை வாங்கியது; அதில், 406.81 ஏக்கர் நிலத்தில், டி.டி.சி.பி., ஒப்புதலுடன், வீட்டுமனை திட்டம் செயல்படுத்தப்பட்டது. டி.டி.சி.பி., தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், உள்ளாட்சி அமைப்புகள், சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில், 118 ஏக்கர் நிலம், ராக்கின்டோ நிறுவனம் வாயிலாக, பொது பயன்பாட்டு வசதிகள் ஏற்படுத்த, தானமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு வெளியில் உள்ள, 300 ஏக்கர் நிலம் தரிசாக, காலி நிலமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலங்கள் தொடர்பான, பட்டா, நில வரைபடம், 'அ' பதிவேடு, வில்லங்க சான்றிதழ் உள்ளிட்ட வருவாய் துறை ஆவணங்கள் அனைத்தும், வெளிப்படையாக உள்ளன. யார் வேண்டுமானாலும், இந்த நிலங்களை ஆய்வு செய்யலாம்.
இத்திட்டத்தில் புறம்போக்கு நிலங்கள் எதுவும் இல்லை. இது தொடர்பாக, சட்டசபையில் செப்.,1ல் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை, 'ஜி ஸ்கொயர்' திட்டவட்டமாக மறுக்கிறது. இந்த கருத்துகள் வருவாய் துறை ஆவணங்களுக்கு முரணானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
