உறுப்பினர்களே இல்லாமல் 'டீ ஆத்தும்' மின் குறைதீர் மன்றம் அம்பலப்படுத்தியது ஆணையம்
உறுப்பினர்களே இல்லாமல் 'டீ ஆத்தும்' மின் குறைதீர் மன்றம் அம்பலப்படுத்தியது ஆணையம்
UPDATED : அக் 12, 2025 01:18 AM
ADDED : அக் 11, 2025 09:42 PM

சென்னை:தமிழகத்தில் பெரும்பாலான மின் குறைதீர் மன்றங்கள், உறுப்பினர்கள் இல்லாமல் கண்துடைப்புக்கு செயல்படுவது தெரியவந்து உள்ளது.
இந்த விபரம், மின் வாரியத்தின் துணை நிறுவனமான பகிர்மான கழக இயக்குநருக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எழுதிய கடிதத்தால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழக மின் வாரியம், நிர்வாக வசதிக்காக, 45 மின் பகிர்மான வட்டங்களாக செயல்படுகிறது. ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு மின் குறைதீர் மன்றம் உள்ளது. இது, ஒரு தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது.
தலைவராக, பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் உள்ளார். ஒரு உறுப்பினரை, மின்சார ஒழுங்குமுறை ஆணையமும், மற்றொரு உறுப்பினரை கலெக்டரும் நியமிக்கின்றனர். அதற்கான நியமன ஒருங்கிணைப்பு பணிகளை, மேற்பார்வை பொறியாளரே மேற்கொள்கிறார். உறுப்பினரின் பதவி காலம் மூன்று ஆண்டுகள்.
ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்களில், மாதந்தோறும் மின் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் மின் தடை, புதிய மின் இணைப்பு தாமதம் உள்ளிட்ட மின்சார சேவைகளால் பாதிக்கப்படுவோர் புகார் அளிக்கலாம்.
தற்போது, 30 - 35 குறைதீர் மன்றங்களில் உறுப்பினர்கள் இல்லை. இந்த தகவல், மின் வாரிய தலைவருக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எழுதிய கடிதம் வாயிலாக அம்பலமாகி உள்ளது.
இதுகுறித்து, நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், 'மேற்பார்வை பொறியாளர் தங்களுக்கு வேண்டியவர்களை உறுப்பினராக நியமிக்கின்றனர். முறையாக அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பம் பெற்று, தகுதியான நபர்களை நியமிக்க வேண்டும்' என்றனர்.