சூரியசக்தி, காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் வாரியம் செயல்படுத்த ஆணையம் அனுமதி
சூரியசக்தி, காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் வாரியம் செயல்படுத்த ஆணையம் அனுமதி
ADDED : அக் 17, 2025 11:01 PM
சென்னை: திருவாரூர், கரூரில் தலா, 15 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள்; துாத்துக்குடி, மதுரை, கன்னியா குமரியில், 16 மெகாவாட் திறனில் சூரியசக்தி மற்றும், 18.75 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள்.
கோவை உள்ளிட்ட ஏழு இடங்களில், 375 மெகாவாட் திறனில், 'பேட்டரி ஸ்டோரேஜ்' போன்ற திட்டங்களை செயல்படுத்த, மின் வாரியத்திற்கு, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க சாதகமான காலநிலை உள்ளது. தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் நிலையில், மின் வாரியம், அந்த பணியில் மெத்தனம் காட்டி வந்தது. கடந்த ஆண்டில், மின் வாரியத்தில் இருந்து பசுமை எரிசக்தி கழகம் என்ற தனி நிறுவனம் துவக்கப்பட்டது.
இந்நிறுவனம், தனியார் நிறுவனங்கள் வாயிலாக, பசுமை மின் திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு தற்போது, மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்துள்ளது.
l திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் கரூர் மாவட்டம் வெள்ளியணையில் தலா, 15 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள் மற்றும் அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மூன்று மணி நேரத்துக்கு சேமித்து வைத்து, மீண்டும் பயன்படுத்தும் வகையில், 'பேட்டரி ஸ்டோரேஜ்' கட்டமைப்பை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
l துாத்துக்குடியில் கயத்தாறு, மதுரை புளியங்குளம், கன்னியாகுமரி முப்பந்தலில், 16 மெகாவாட் திறனில் சூரியசக்தி, 18.75 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்களை, தனியார் நிறுவனம் வாயிலாக அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
l திருப்பூர் மாவட்டம் பல்லடம் துணை மின் நிலையத்தில், 25 மெகாவாட்; புதுக்கோட்டையில், 25; புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில், 50; திருவாரூரில், 50; கோவை காரமடையில், 75; தேனி தப்பகுண்டில், 50; திருப்பூர் ஆணைகடவில், 100 மெகாவாட் என, 375 மெகாவாட் பசுமை மின்சாரத்தை, நான்கு மணி நேரத்துக்கு சேமித்து, மீண்டும் பயன்படுத்தும் வகையில், பேட்டரி ஸ்டோரேஜ் திட்டத்தை செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டங்கள், தனியார் நிறுவனங்கள் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளன. அதன்படி, பசுமை எரிசக்தி கழகம், 'டெண்டர்' கோரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
ஆணையம் அனுமதி அளித்ததை அடுத்து, தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்ய, விரைவில் டெண்டர் கோர ஆயத்தமாகி உள்ளது.