காட்டிக் கொடுத்தது காப்பி பேஸ்ட் அறிக்கை; மாட்டிவிட்ட இ.பி.எஸ்., அட்மின் என்ன ஆவார்?
காட்டிக் கொடுத்தது காப்பி பேஸ்ட் அறிக்கை; மாட்டிவிட்ட இ.பி.எஸ்., அட்மின் என்ன ஆவார்?
UPDATED : ஜன 20, 2025 10:55 AM
ADDED : ஜன 20, 2025 10:37 AM

சென்னை: கனிமவளக் கொள்ளை தொடர்பாக நேற்றிரவு 10.10 மணிக்கு, அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையை, இன்று (ஜன.,20) 9.54 மணிக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
சமூக ஆர்வலர் ஜெபகர் அலி கொலையைக் கண்டித்து நேற்றிரவு 10.10 மணிக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 'தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது' என்று அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், இதே விவகாரத்தைக் கண்டித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., இன்று (ஜன.,20) காலை 9.54 மணிக்கு கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான வார்த்தைகள் அப்படியே காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அ.தி.மு.க., ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான ஜெபகர் அலி, சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது
கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட கலெக்டரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் சமூக விரோதிகள் லாரி ஏற்று படு கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது இந்த அரசு.கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு.
ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புகைப்படங்கள் இதோ!
அண்ணாமலை நேற்றிரவு 10.10 மணிக்கு வெளியிட்ட அறிக்கை!
இ.பி.எஸ்., இன்று (ஜன.,20) காலை 9.54 மணிக்கு வெளியிட்ட அறிக்கை