சிவில் சர்வீஸ் நேர்மையாக இருக்கும் வரை நாட்டின் ஜனநாயகத்தை தொட முடியாது! முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை பேச்சு
சிவில் சர்வீஸ் நேர்மையாக இருக்கும் வரை நாட்டின் ஜனநாயகத்தை தொட முடியாது! முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை பேச்சு
ADDED : டிச 22, 2024 08:52 AM

கோவை : ''சிவில் சர்வீஸ் நேர்மையாக, நடுநிலையோடு இருக்கும் வரை, நமது நாட்டின் ஜனநாயகத்தை யாராலும் தொட முடியாது,'' என, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை பேசினார்.
'தினமலர்' நாளிதழ், வாஜிராம் அண்டு ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்சாமினேஷன் வழங்கும், 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' நிகழ்ச்சி, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரியில், நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை பேசியதாவது:
இன்று சேவையை தாண்டி, பலரும் அறிவை தேடி வெளியில் வருகின்றனர். சமூக பொறுப்புடன் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும், 'தினமலர்' நாளிதழுக்கு பாராட்டுக்கள்.
அரசியலில் அதிகாரம் போகும்; வரும். ஆனால், சிவில் சர்வீஸில் அதிகாரம் போகாது. சிவில் சர்வீஸ் தேர்வில், மட்டுமே இளம் வயதில் உயர் பதவிக்கு செல்ல முடியும். ஒரு இளைஞர், 30 வயதுக்குள் கலெக்டர், எஸ்.பி., பதவிகளை வகிக்க முடியும்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வருவது, உங்களை போன்றவர்களால் தான்; அரசியல்வாதிகளால் இல்லை. ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள், இந்திய சிவில் சர்வீஸ் பணியில் உள்ளவர்களே. ஒரு தலைபட்சமாக, மதம், மாநிலம், மொழி ரீதியாக நீங்கள் சென்று விட்டால், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வராது.
நாட்டின் உயர்வு உங்களிடம்
இந்திய நாடு உங்களுடையது. அதை உயர்த்த வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. சிவில் சர்வீஸ் நேர்மையாக, நடுநிலையோடு இருக்கும் வரை, நமது நாட்டின் ஜனநாயகத்தை யாராலும் தொட முடியாது.
இது ஒரு அருமையான யாத்திரை போன்றது. புனித பயணத்தை துவங்கி உள்ளீர்கள். அதற்கு கஷ்டப்பட வேண்டும். பல தேர்வுகளை எழுத வேண்டும். சிவில் சர்வீசஸ் எழுதுவோருக்கு, விசாலமான பார்வை இருக்க வேண்டும். அடுத்த, 30 ஆண்டுகள் இந்தியாவை எப்படி முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.
30 ஆண்டுகள் கழித்து நீங்கள் பதவிக்கு வரும் போது, நாட்டை 12.5 தடவைகள் முன்னேற்ற வேண்டும். நாடு வளர்வதால், சிவில் சர்வீஸ் பாடத்திட்டமும் மாறும். நீங்களும் அதற்கேற்றார் போல் மாற வேண்டும். நேர்முகத்தேர்வில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தி, நேர்மையாக இருக்க வேண்டும்.
அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்
எதற்கு நீங்கள் சென்றுள்ளீர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. எதுவும் உங்கள் கையில் இல்லாததால், நீங்கள் உங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். எங்கிருந்தாலும் பணி செய்ய வேண்டும். அந்தளவுக்கு உங்களிடம் பொறுப்பை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவில் சர்வீசஸ் என முடிவு எடுத்து விட்டால், முழு மனதுடன், அர்ப்பணிப்புடன் தயாராக வேண்டும். தமிழகத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை குறைவது வருத்தத்தை அளிக்கிறது.
தமிழகத்தில், 16 சதவீதம் வரை இருந்த பங்களிப்பு, இன்று, 4 - 5 சதவீதம் மட்டுமே உள்ளது. முதல் மூன்று இடங்களை பிடிக்கும் தமிழகம் இன்று, 125 என்ற இடத்துக்கு சென்றுள்ளது. இதற்கு காரணம் என்ன என்பதை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.