ADDED : பிப் 18, 2025 02:27 AM

ஆக்ரா,: டில்லியை சேர்ந்தவர் தீபாயன் கோஷ். இவரது மனைவி கஸ்துாரி பத்ரா. குர்கானில் வசிக்கின்றனர். இவர்கள் வூப், கிரேஹவுண்ட் என்ற பெயரில் இரு நாட்டு ரக நாய்களை வளர்க்கின்றனர். இந்த தம்பதி, நவ., 3ல் ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டலில் நாய்களுடன் தங்கினர்.
நாய்களை ஹோட்டலில் விட்டு விட்டு, பதேபூர் சிக்ரியை சுற்றிப் பார்க்க சென்றனர். திறந்திருந்த ஹோட்டல் கதவு வழியாக கிரேஹவுண்ட் நாய் வெளியே சென்று விட்டது. ஹோட்டல் ஊழியர்கள், தம்பதிக்கு தகவல் தெரிவித்தனர். தம்பதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடிப் பார்த்தனர்.
நாயை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஹோட்டல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நவ.,5ல் தாஜ்மஹால் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நாய் சுற்றி திரிந்த காட்சி சி.சி.டி.வி.,யில் பதிவாகி இருந்தது.
வேறு சிலரோ, நாயை ஆக்ராவில் உள்ள ஷாஜகான் கார்டனில் பார்த்ததாக தெரிவித்தனர்.
நாய் ஆக்ராவில் இருப்பதை உறுதி செய்து கொண்ட தம்பதி, இரண்டு வாரங்கள் அங்கேயே தங்கி வீடு வீடாக சென்று விசாரித்தனர். வழியில் தென்பட்ட நபர்களிடம் எல்லாம், தங்கள் நாய் காணாமல் போய்விட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியாக இருந்தாலும், இருள் சூழ்ந்த இடமாக இருந்தாலும், தேடிச் செல்வதற்கு தம்பதி தயங்கவில்லை. தன் நாயின் பெயரைச் சொல்லி, பல நூறு முறை கஸ்துாரி அழைத்தார். எங்காவது அருகில் இருந்தால், தன் குரல் கேட்டதும் நாய் ஓடி வந்து விடும் என்பது அவரது நம்பிக்கை.
நாயை கண்டுபிடித்துக் கொடுத்தால் 30 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்குவதாக முதலில் அறிவித்த தம்பதி, பின்னர் அதை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தனர். ஆக்ரா முழுவதும் நாய் படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.இரவு பகலாக நாயை தேடிய அவர்களுக்கு முயற்சிக்கு கடைசியில் பலன் கிடைத்தது. பிரசாந்த் ஜெயின் என்ற சுற்றுலா வழிகாட்டி, அவர்களுக்கு போன் செய்து உங்கள் நாயைப் போலவே ஒரு நாய் இருப்பதாக தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் குறிப்பிட்ட ஷாஜகான் கார்டன் பகுதிக்கு தம்பதி காரில் சென்றனர். அதற்குள் அங்கு இருள் கவிழ்ந்து விட்டது. ஆனாலும் தம்பதி தங்கள் நம்பிக்கையை கைவிடவில்லை.
காரில் இருந்து இறங்கியதும், கஸ்துாரி நாயின் பெயரைச் சொல்லி சத்தமாக கூப்பிட்டார். அவரது குரல் கேட்டதும், நாய், இருட்டுக்குள் இருந்து நான்கு கால் பாய்ச்சலில் ஓடோடி வந்து அவரைக் கட்டித் தழுவிக் கொண்டது. வாயில்லா அந்த ஜீவனை பாசமுடன் வளர்த்த தம்பதி, கண்ணீர் மல்க அதை அரவணைத்துக் கொண்டனர்.
வளர்ப்பு நாய்க்காக, 104 நாட்கள், வேலையை விட்டு, தேடுவதையே 24 மணி நேரமும் செய்து கொண்டிருந்த அந்த தம்பதி, தங்களுக்கு உதவிய அனைவருக்கும், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

