திருச்செந்துார் கோவில் ராஜகோபுர வாயிலை திறக்க தொடர்ந்த வழக்கு கோர்ட் தள்ளுபடி
திருச்செந்துார் கோவில் ராஜகோபுர வாயிலை திறக்க தொடர்ந்த வழக்கு கோர்ட் தள்ளுபடி
ADDED : அக் 17, 2024 09:30 PM
மதுரை:திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவில் ராஜகோபுர வாயிலை திறக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
துாத்துக்குடி மாவட்டம், சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழக அறநிலையத்துறை கமிஷனர், 2020ல் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், 'திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவில் ராஜகோபுரம் வாயிலை திறப்பது குறித்து விதாயகர்த்தா, ஓய்வு பெற்ற தொல்லியல் நிபுணரிடம் கருத்து கோரப்பட்டது.
'மேற்கு பாகத்திலுள்ள ராஜகோபுர நுழைவு வாயிலின் தரைத்தளம், கிழக்கு பாகத்திலுள்ள மூலவர் சன்னிதியை விட, 25 அடி உயரத்தில் அமைந்துள்ளது. உயரமான இடத்திலிருந்து, கீழே மூலஸ்தான சன்னிதிக்கு பின்புறம் வந்து வழிபடுவது சாஸ்திரத்திற்கு மாறுபட்டது. ராஜகோபுர வாயிலை திறப்பது ஏற்புடையதல்ல' என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 'ராஜகோபுர படிக்கட்டுகள் உயரமாக, அகலம் குறைந்துள்ளன. இப்பாதை வழியாக பக்தர்களை அனுமதித்தால், நெருக்கடியின் காரணமாக, அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளது. ராஜகோபுர வாயிலை பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறக்க வழிவகை இல்லை' என தெரிவிக்கப்பட்டது.
இது பக்தர்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. பக்தர்களிடம் கருத்து கோராமல் கமிஷனர் முடிவெடுத்துள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ராஜகோபுர வாயிலை திறக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு:
கடந்த 2020ல் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக, நான்கு ஆண்டுகள் தாமதத்திற்கு பின், இந்நீதிமன்றத்தை மனுதாரர் நாடியுள்ளார். களநிலவரத்திற்கேற்ப, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் முடிவெடுக்க இயலும். நீதிமன்றம் தலையிட முடியாது; மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.