யானைகளை பராமரிக்க விதிமுறைகள் வெளியிட்டது அறநிலையத்துறை
யானைகளை பராமரிக்க விதிமுறைகள் வெளியிட்டது அறநிலையத்துறை
ADDED : நவ 27, 2024 04:39 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்: திருச்செந்துாரில் கோவில் யானை தாக்கி இருவர் உயிரிழப்பு, குன்றக்குடி கோவில் யானை தீவிபத்தில் உயிரிழப்பு போன்ற சம்பவங்களை தொடர்ந்து, தமிழகத்தில் கோவில்கள், மடங்களில் உள்ள யானைகளை மிகுந்த கவனமுடன் பராமரிக்க, தமிழக சுற்றுச்சூழல், வனத்துறை சார்பில் அறநிலையத்துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதை பின்பற்றி தமிழக அறநிலையத்துறை, யானைகளை கவனமுடன் பராமரிக்க, 39 விதிமுறைகளை அறிவுறுத்தி உள்ளது. அவற்றில் சில:
யானைகளை உறுதியான மண் அல்லது புல்தரையில் நிறுத்தி வைக்க வேண்டும். இயற்கையான வெளிச்சம், காற்றோட்டத்துடன் கான்கிரீட் கொட்டகை அமைக்க வேண்டும்
யானையின் எடை, வயதுக்கு ஏற்ப உணவுகளை உள்ளூர் கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் வழங்க வேண்டும். பாகன்கள் கூடுமானவரை அங்குசத்தை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
யானைக்கு வெப்பம் அதிகரிக்கும் போது, அதை சங்கிலியால் பிணைத்து தேவையான உணவு, தண்ணீர் அருகில் வைக்க வேண்டும். மது அருந்தியவரை யானையின் அருகில் செல்ல அனுமதிக்க கூடாது
யானைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். கோவில் திருவிழா, சாமி புறப்பாடு நாட்களில், யானையை கொண்டு செல்லும் போது பொதுமக்களிடம் காசு பெறுவதையோ, ஆசிர்வாதம் செய்வதையோ அனுமதிக்க கூடாது. வாசனை திரவியங்களை பயன்படுத்துபவர்களை, யானையின் அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது
யானைகள் இல்லாத கோவில்களில், திருவிழாவிற்கு தனியார் யானைகளை பெற்று பயன்படுத்தக்கூடாது. பட்டாசுகள் வெடிக்கும் இடங்கள் மற்றும் மின் கருவிகள் உள்ள பகுதிகளில் யானைகளை அழைத்துச் செல்லக்கூடாது. இவ்வாறு அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார்.