ADDED : ஜூலை 13, 2011 01:08 AM
வேலூர் : வேலூர் அருகே, 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதில், நகைகள் மறைக்கப்பட்டதாக, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே, முடினாம்பட்டு கிராமத்தில் உள்ள மலட்டாற்றில், கடந்த 2ம் தேதி காலை 8 மணிக்கு, 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். மணலின் அடியில் கிடைத்த தங்க ஆபரணங்களை சிறுவர்கள், தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இத்தகவல் கிராமம் முழுவதும் பரவி, பலருக்கும் தங்க நாணயங்கள், ஆபரணங்கள் கிடைத்துள்ளன.
தங்க புதையல் கிடைக்காதவர்கள், இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வருவாய் அலுவலர்கள், முடினாம்பட்டு ஊராட்சி துணைத் தலைவர் தண்டபாணியுடன், புதையல் கிடைத்த இடத்தை பார்த்தனர். புதையலை கொடுத்து விடும்படி, சிறுவர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே, 'புதையல் அரசு சொத்து. ஒரு மணி நேரத்தில் புதையலை ஒப்படைக்காவிட்டால், போலீசை அழைத்து வீடுகளை சோதனை செய்வோம்' என எச்சரித்தனர். பயந்து போன, 15 பேர், 36 பொருட்கள் அடங்கிய தங்க புதையலை, ஊராட்சி துணைத் தலைவர் தண்டபாணியிடம் ஒப்படைத்தனர். வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணனிடம், வருவாய்த் துறையினர் அவற்றை ஒப்படைத்தனர்.
தங்க புதையலை ஆய்வு செய்ததில், இவை அனைத்தும் 16, 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க நகைகள் என்றும், தாலி,தோடு, காதணி, குண்டு,குப்பி, கைக்காப்பு, சிறு கிரீடம் என, 105 கிராம் எடை இருந்தது. இவையனைத்தும், அம்மன் சிலை ஆபரணங்களாக இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றை மாவட்ட கலெக்டர் நாகராஜனிடம், காப்பாட்சியாளர் சரவணன், நேற்று காண்பித்தார். விரைவில் இவற்றை, சென்னை அரசு அருங்காட்சியக ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், முடினாம்பட்டு கிராமத்தில் கிடைத்துள்ள புதையலின் ஒரு பகுதியை மட்டுமே, வருவாய்த் துறையினரிடம் கிராம மக்கள் ஒப்படைத்துள்ளதாகவும், ஏராளமான நகைகளை, கிராம மக்களே மறைத்து வைத்துக் கொண்டதாகவும் புகார் வந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினர், கே.வி.குப்பம் போலீசில் புகார் செய்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், இவ்விவகாரத்தில் அவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக, வருவாய்த் துறையினர் கூறுகின்றனர்.