ADDED : நவ 09, 2024 09:08 PM
சென்னை:தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், த.வெ.க., நிர்வாகிகளை ரகசியமாக அழைத்து, தி.மு.க.,வினர் பரிசு வழங்கி வருகின்றனர்.
தன் கட்சி மாநாட்டில், தி.மு.க.,வையும், அரசையும் கடுமையாக விமர்சித்து, விஜய் பேசினார். இது தி.மு.க., தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பதிலடி கொடுக்கும் வகையில், புதிய வியூகத்தை அக்கட்சி வகுத்து செயல்படத் துவங்கியுள்ளது.
அதன்படி, ஒன்றியம், பேரூராட்சி அளவில் உள்ள த.வெ.க., நிர்வாகிகளை, தி.மு.க., ஒன்றிய மற்றும் பேரூராட்சி செயலர்கள் ரகசியமாக சந்தித்து வருகின்றனர்.
அப்போது, விஜய் கட்சி துவக்கியதற்கு வாழ்த்து கூறுகின்றனர். பின், தீபாவளிப் பரிசு என்ற பெயரில், இனிப்புகள், பரிசு, பணம் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.
த.வெ.க., நிர்வாகிகள் பலரும் வசதி குறைந்தவர்கள் என்பதால், தி.மு.க.,வினரின் வலையில் விழுகின்றனர். இதன் வாயிலாக, ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படாதபடி, அவர்கள் வளைக்கப்பட்டு வருகின்றனர்.
தி.மு.க.,வினரின் வளைப்பு முயற்சியால், தேர்தலை சந்திக்க அடுத்தடுத்து விஜய் எடுக்கும் முயற்சிகளில் பின்னடைவு ஏற்படும் வாய்ப்புள்ளது என அஞ்சும் த.வெ.க.,வினர், இதில் இருந்து கட்சியினரை எப்படி விலகி இருக்கச் சொல்லலாம் என்பது குறித்து தீவிரமாக யோசித்து வருகின்றனர்.