மக்களின் தூக்கத்தை தொலைத்த தி.மு.க., அரசு; இ.பி.எஸ்., பதிலடி!
மக்களின் தூக்கத்தை தொலைத்த தி.மு.க., அரசு; இ.பி.எஸ்., பதிலடி!
ADDED : டிச 02, 2024 02:17 PM

சென்னை: 'முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சரியான வெள்ள தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. விழுப்புரம் மக்கள் நேற்றிரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்ததுக்கு காரணம் தி.மு.க., அரசு தான்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அதிகபட்சமாக 503 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது. மழை பாதிப்புகளை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மழை வெள்ளத்தில், பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தப்பட்டிருந்த 50 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
இதனை சரி செய்ய அதிக செலவாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க., அரசு நிவாரணம் வழங்க வேண்டும். 55 வீடுகள் நீரில் முழ்கி உள்ளன. கரையோர மக்களுக்கு பாதுகாப்பான மாற்று இடத்தை வழங்க வேண்டும். நெற்பயிர்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலம் என எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சரியான வெள்ள தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. விழுப்புரம் மக்கள் நேற்றிரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்ததுக்கு காரணம் தி.மு.க., அரசு தான்.
நேற்றிரவு கனமழை பெய்ததால், மக்கள் தூக்கத்தை தொலைத்தனர். விழுப்புரத்தில் குடியிருப்புக்குள் தண்ணீர் தேங்கியதற்கு காரணம் தி.மு.க., அரசு தான். செயலற்ற அரசு தி.மு.க., அரசு. சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் விழுப்புரம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.