மதிமுக.,வுக்கு தீப்பெட்டி, விசிக.,வுக்கு பானை, ஓ.பி.எஸ்.,க்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு
மதிமுக.,வுக்கு தீப்பெட்டி, விசிக.,வுக்கு பானை, ஓ.பி.எஸ்.,க்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு
UPDATED : மார் 30, 2024 05:50 PM
ADDED : மார் 30, 2024 03:50 PM

சென்னை: லோக்சபா தேர்தலில் ம.தி.மு.க.,வுக்கு தீப்பெட்டி சின்னத்தையும், விசிக.,வுக்கு பானை சின்னத்தையும், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு பழாப்பழ சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க., திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் வைகோ மகன் துரை போட்டியிடுகிறார். தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி, வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், ஒரே மாநிலத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே, முன்பு ஒதுக்கீடு செய்த சின்னத்தை தர முடியும். பம்பரம் பொதுச்சின்னமாக அறிவிக்கவில்லை. அதை ஒருவருக்கும் ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதனையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையடுத்து புதிய சின்னத்தை தேடும் பணியில் ம.தி.மு.க., ஈடுபட்டது.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் ம.தி.மு.க.,வுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, சின்னத்துடன் திருச்சியில் மதிமுக.,வினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓ.பி.எஸ்.,க்கு பலாப்பழ சின்னம்
ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாளி, பலாப்பழம், திராட்சை ஆகிய 3 சின்னங்களில் ஏதாவது ஒன்று ஒதுக்குமாறு பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திடம் மனுத்தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

