ADDED : செப் 22, 2024 01:12 AM
சென்னை:இந்திய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, தேசிய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கங்களின் பேரமைப்பு சார்பில், சென்னையில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அமைப்பின் பொதுச்செயலர் தனசேகர் தலைமை வகித்தார். காங்கிரஸ் முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ், தி.மு.க., - எம்.பி., கனிமொழி சோமு, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.
நாடு தழுவிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். 2017ல் உயர்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூக கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்த வேண்டும். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியாளர் நியமனங்களை மாநில அளவில் நடத்த வேண்டும் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.