உங்களை பார்த்து நாடே வியக்கிறது எம்.பி.,க்களை பாராட்டிய முதல்வர்
உங்களை பார்த்து நாடே வியக்கிறது எம்.பி.,க்களை பாராட்டிய முதல்வர்
ADDED : டிச 22, 2024 02:01 AM
சென்னை: பார்லிமென்ட்டில், தி.மு.க., - எம்.பி.,க்களின் செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிப்பதாக, அக்கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பார்லிமென்ட் கூட்டத் தொடர், கடந்த நவ., 25 முதல் டிச., 20 வரை நடந்து முடிந்துள்ளது. இதில் வீறுகொண்ட வீரர்களாக, தி.மு.க., - எம்.பி.,க்கள் முழங்கியிருக்கின்றனர். தி.மு.க., - எம்.பி.,க்களின் செயல்பாடுகளைப் பார்த்து நாடே வியந்து கொண்டு இருக்கிறது.
தமிழகத்தின் நலனுக்காக குரல் கொடுப்பதிலும், மாநில உரிமைகள் தொடர்பான பிரச்னைகளை எழுப்புவதிலும், மற்ற மாநில எம்.பி.,க்களுக்கு முன்னோடிகளாக, தி.மு.க.,வினர் செயல்படுகின்றனர்; அதைப் பார்த்து மகிழ்கிறேன்.
மோடி மவுனம்
தொழிலதிபர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் என எதற்கும் பதில் சொல்லாமல், பிரதமர் மோடி மவுனம் காக்கிறார்.
பார்லிமென்டில் ஜனநாயகம், பா.ஜ.,வினரால் படாதபாடு பட்டபோது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். லோக்சபா, 54.5 சதவீதமும், ராஜ்யசபா 40 சதவீதமும் தான் ஆக்கப்பூர்வமானதாக செயல்பட்டுள்ளது.
அரசின் தோல்விகள் குறித்த எந்த விவாதமும் நடந்து விடக்கூடாது என்பதை மனதில் வைத்து, பா.ஜ., - எம்.பி.,க்கள் செயல்பட்டதை காண முடிந்தது. இதை எண்ணி, தி.மு.க., கவலை கொள்கிறது.
அரசியல் சட்டத்தின் 75வது ஆண்டையொட்டி, ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை இழிவுபடுத்தினார். இது, பா.ஜ.,வின் உயர் வர்க்க பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது.
ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா; இன்னொரு புறம் அதை உருவாக்கித் தந்த அம்பேத்கருக்கு அவதுாறு. இதுதான் பா.ஜ.,வின் பசப்பு அரசியல்.
அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்து வரும் தி.மு.க.,வின் தலைவர் என்ற நிலையில், கட்சி எம்.பி.,க்களின் சாதனைகளை மார்தட்டி அறிவித்துக் கொள்ள வேண்டியது முக்கியம் என்றே கருதுகிறேன்.
ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாக, தி.மு.க., - எம்.பி.,க்கள் சுட்டிக்காட்டிய பிரச்னைகள், எழுப்பிய மாநில உரிமை முழக்கங்கள், ஜனநாயகத்தை பாழ்படுத்தும் ஒரே நாடு; ஒரே தேர்தலை ஆணித்தரமாக எதிர்த்தது ஆகியவை, மத்திய அரசின் செவிகளில் உரக்கவே விழுந்திருக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
மீண்டும் தக்க பதிலடி
இதன் வாயிலாக, தமிழகத்தை, தமிழக மக்களை ஓரவஞ்சனையுடன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு தொடர்ந்து நடத்த முடியாது என்ற செய்தியை, தி.மு.க., - எம்.பி.,க்கள் பதிய வைத்திருக்கின்றனர்.
இனியும் மத்திய அரசு, தமிழகத்தின் உரிமைகளை தரவில்லையென்றால், தமிழக மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பர் என்பது உறுதி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.