ADDED : பிப் 22, 2024 03:01 AM
சென்னை:மதுரைக்கான அறிவிப்புகளை, அமைச்சர் தங்கம் தென்னரசு பட்டியலிட்டதை கண்ட அமைச்சர் துரைமுருகன், 'வட மாவட்டத்தினர் வாட்டமாக பார்த்து கொண்டிருக்கிறோம்' எனக் கூறியதால், சபையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - செல்லுார் ராஜு: சிங்கார சென்னைக்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதை வரவேற்கிறோம். இதேபோல் மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்குங்கள்.
மதுரையில் நிறைய கால்வாய்கள், துார் வாரப்படாமல் உள்ளன; அவற்றை துார் வார வேண்டும்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: தென் மாவட்டத்திற்கு ஒன்றும் வரவில்லையே; மதுரைக்கு ஒன்றும் வரவில்லையே என, அண்ணன் வருத்தப்பட்டார். இந்த பட்ஜெட்டில் மட்டும், மதுரையில் டைடல் பார்க் வர உள்ளது. கருணாநிதி நுாற்றாண்டு நுாலகம்; கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் மதுரைக்கு, தொழில் புத்தாக்க மையம், திறன் மேம்பாட்டு மையம், அடுக்குமாடி தொழில் வளாகம், ஒருங்கிணைந்த சுற்றுலா வளர்ச்சி திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், இலவச வைபை, கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம், வைகை சீரமைப்பு, நகர்ப்புற பசுமை திட்டம், திருப்பரங்குன்றத்திற்கு ரோப்கார் வசதி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் உள்ளன.
அமைச்சர் துரைமுருகன்: தென் மாவட்டங்கள், குறிப்பாக மதுரையில் மட்டும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வித்தியாசம் இல்லாமல், அமைச்சர் படித்ததை பார்த்தோம். வட மாவட்டத்தினர், வாட்டத்துடன் பார்த்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு, துரைமுருகன் கூறியதும், சபையில் சிரிப்பலை எழுந்தது. அப்போது சபாநாயகர் அப்பாவு, எல்லா மாவட்டத்துக்கும் அறிவிப்புகள் உள்ளன என்றார்.
விவாதம் நிறைவடைந்தது.