UPDATED : டிச 01, 2024 09:46 AM
ADDED : நவ 30, 2024 07:23 PM

சென்னை: பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்ததாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதற்கு பெஞ்சல் என பெயர் சூட்டப்பட்டது. இது, மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் கணித்து இருந்தது.இது மெதுவாக கரையை நோக்கி நகர்ந்து வந்தது.
நேற்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மாலை 5: 30 கரையை கடக்க துவங்கிய புயல் டிசம்பர் 1 அதிகாலை 1 மணியளவில் முழுமையாக கரை கடந்தது. புயல் கரை கடந்தாலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
சென்னைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்ட நிலையில், இரவு 10 மணி வரையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
கனமழை
புயல் கரையை கடக்க துவங்கிய நேரத்தில் விழுப்புரம், கடலூரில் கனமழை பெய்தது.
மின்சாரம் துண்டிப்பு
புயல் கரையை கடந்த சமயத்தில் மரக்காணம், மாமல்லபுரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சூறைக்காற்று
புயல் கரை கடந்த நேரத்தில் கடலோர பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியது. சென்னை மெரினா கடற்கரை, புதுச்சேரியிலும் பலத்த காற்று வீசியது.
வலுவிழக்கும் புயல்
பெஞ்சல் புயல் மேற்கு தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.