கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைகிறது கள அருங்காட்சியகம்
கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைகிறது கள அருங்காட்சியகம்
ADDED : ஜன 05, 2024 10:34 PM
சென்னை:''கங்கைகொண்ட சோழபுரத்தில் கள அருங்காட்சியகம் அமைக்கப்படும்,'' என, அறநிலையத்துறை செயலர் மணிவாசன் பேசினார்.
தமிழக தொல்லியல் துறை சார்பில், தெற்காசிய செராமிக்ஸ் குறித்த வரலாறு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த மூன்றாவது சர்வதேச மாநாடு, சென்னை கிண்டி, ஐ.ஐ.டி., வளாகத்தில் நேற்று துவங்கியது; 9ம் தேதி வரை நடக்கிறது.
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை செயலர் மணிவாசன், 'பட்டறைப்பெரும்புதுார் அகழாய்வு, சிவகங்கை மாவட்ட கல்வெட்டுகள்' உள்ளிட்ட நுால்களை வெளியிட்டு, மாநாட்டை துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
தமிழக தொல்லியல் துறை, அகழாய்வுகள், கல்வெட்டு ஆய்வுகளில் மும்முரமாக உள்ளது.
தமிழகத்தில் தற்போது அகழாய்வுகள் நடக்கும் கீழடி, கங்கைகொண்ட சோழபுரம், வெம்பக்கோட்டை உள்ளிட்ட இடங்களுடன், புதிதாக கொங்கல்நகரம், சென்னனுார், மருங்கூர் ஆகிய இடங்களிலும், இந்தாண்டு அகழாய்வு செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே அகழாய்வு நடந்து வரும் கங்கைகொண்ட சோழபுரத்தில் கள அருங்காட்சியகம் அமைய உள்ளது.
இந்த கருத்தரங்கின் வாயிலாக, தெற்காசியாவில் கிடைத்துஉள்ள மண்பாண்டங் களின் வாயிலாக, வரலாறு, அறிவியல் தகவல்களை அறிய முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.