UPDATED : பிப் 21, 2024 02:55 AM
ADDED : பிப் 19, 2024 11:56 PM

சென்னை :வரும், 2024- - 25ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
லோக்சபா தேர்தல் நெருங்குவதால் சலுகைகளும், புதிய திட்டங்களும், பட்ஜெட்டில் இடம்பெறும் என, பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அதை, தென்னரசு பொய்யாக்கவில்லை.
முக்கியமாக, 'தமிழகத்தில் வறுமையை ஒழித்துக் கட்டுவதற்கான இறுதி யுத்தமாக, 'முதல்வரின் தாயுமானவர் திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவிகள் வழங்கப்படும்
அதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஐந்து லட்சம் ஏழை குடும்பங்களை கண்டறிந்து, அவர்களை வறுமையில் இருந்து மீட்டு கரை சேர்க்க போவதாக அரசு தெரிவித்துள்ளது.
சமூக நல திட்டங்கள் தொடர்பாக, பட்ஜெட்டில் கூறியுள்ளதாவது:
சமூக நல திட்டங்களின் வழியாக, வறுமையை குறைப்பதில் தமிழகம் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
![]() |
அதை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசின், 'நிடி ஆயோக்' சமீபத்திய அறிக்கையில், தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் சதவீதம் மிகக் குறைவாக, 2.2 சதவீதம் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளது.அந்த குடும்பங்களையும் கண்டறிந்து, எல்லா வகையிலும் அவர்களின் கஷ்டங்களை போக்கி, மாநிலத்தில் வறுமையை அடியோடு ஒழித்து கட்ட தமிழக அரசு இறுதி யுத்தத்தை துவக்கி உள்ளது.
ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் என, சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் அனைவரும், இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்படுவர்.
அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, கல்வி, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு பயிற்சி, வீடு போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
முதல்வரின் தாயுமானவர்
அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு, மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராம சபை ஆகியவற்றின் வழியாக, மாநிலம் முழுக்க இக்குடும்பங்கள் கண்டறியப்படும்.
'முதல்வரின் தாயுமானவர்' என்ற பெயரிலான இத்திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், வங்கிகள் பங்கேற்பு உறுதி செய்யப்படும்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
பட்ஜெட் உரையில் இருந்து, மேலும் சில முக்கிய அறிவிப்புகள்:
* ஊரக பகுதிகளில், 2030ம் ஆண்டுக்குள், 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். முதல் கட்டமாக, இந்த நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் தலா 3.50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும். 'கலைஞரின் கனவு இல்லம்' என்ற பெயரில், இதற்காக 3,500 கோடி செலவிடப்படும்.
*தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் பங்களிப்போடு, 'நகர்ப்புற பசுமை திட்டம்' செயல்படுத்தப்படும்.
*மகளிர் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கும், 'விடியல் பயணம்' திட்டம், நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
* 'புதுமைப் பெண்' திட்டம், வரும் கல்வியாண்டு முதல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவியரும் பயன் பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும். இதற்கென, 370 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
*முதல்வரின் காலை உணவு திட்டம், அரசு உதவி பெறும் ஊரக பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், 2.50 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும்.
*இந்தியாவில் முதல் முறையாக, தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி, ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில் அமைக்கப்படும்.
*முதல்வர் தலைமையில், 'தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்' ஏற்படுத்தப்படும்
* பொதுத் துறை மற்றும் தனியார் பங்கேற்புடன், 60,000 கோடி ரூபாயில், புதிய நீரேற்று புனல் மின் நிலையங்கள் உருவாக்கப்படும்.
*கடலோர மாவட்டங்களில் வளங்களை மீட்டெடுக்க, 1,675 கோடியில், 'நெய்தல் மீட்சி இயக்கம்' செயல்படுத்தப்படும்.
*'தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்' அமைக்க நடப்பு கூட்டத் தொடரில் சட்டம் இயற்றப்படும்.


