நேர்மையின் நெருப்பு; நாணயத்தின் கவசம் வேறு வழியின்றி கொந்தளித்த வைகோ
நேர்மையின் நெருப்பு; நாணயத்தின் கவசம் வேறு வழியின்றி கொந்தளித்த வைகோ
ADDED : நவ 19, 2025 06:33 AM

திருச்சி: ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பல நுாறு கோடிக்கான சொத்துக் களை குவித்து விட்டதாக, அக்கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மல்லை சத்யா நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
அதற்கு, உடனடியாக பதிலளித்ததை தவிர்க்க வைகோ நேற்று வேறு வழியின்றி, மல்லை சத்யா விமர்சனத்துக்கு எதிராக கொந்தளித்தார்.
திருச்சியில் அவர் அளித்த பேட்டி:
கடந்த இரண்டு ஆண்டுகளாக, ம.தி.மு.க.,வுக்குள் பல குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார், கட்சியின் துணைப் பொதுச்செயலராக இருந்த மல்லை சத்யா.
அவர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, '1,500 கோடி ரூபாய் அளவுக்கு வைகோவும், குடும்பத்தினரும் சம்பாதித்து விட்டனர்' என சொல்லி இருக்கிறார். யார் துாண்டுதலின் பேரில் அவர் இப்படி பேசுகிறார் என தெரியவில்லை.
நான் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவன். 10 கல் தொலைவில் இருந்து பார்த்தால் தெரியும் வகையில், மூன்றடுக்கு மாளிகையை என் பாட்டனார் கட்டி வைத்திருந்தார்.
கோடிக்கணக்கான சொத்துக்களை, அரசியலுக்கு வந்த பின் இழந்தேன். பொது வாழ்வில் இழந்தது அதிகம். அதை இழப்பாக நான் நினைக்கவில்லை. நேர்மையாக, கறை படியாத கரங்களாக ஜென்ம எதிரிகள் கூட, என் நாணயத்தை பற்றி குறை சொல்ல முடியாது.
ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்களை கூறி, பழி துாற்றுவதன் மூலம், ஏசல் மொழிகளை வீசுவதன் மூலம், எங்களை கொச்சைப்படுத்த முடியாது. மக்கள் மன்றத்தில், வைகோ என்றால் 'நேர்மையின் நெருப்பு, நாணயத்தின் கவசம்' என்பதை 61 ஆண்டு கால பொது வாழ்க்கையில் நிரூபித்து இருக்கிறேன். மடியும் வரை அந்த நற்பெயரை காப்பாற்றக் கூடியவன் நான்.
திருச்சி எம்.பி.,யான என் மகன் துரை வைகோவையும் விட்டு வைக்கவில்லை. 250 கோடி ரூபாய் சம்பாதித்து விட்டார், என்று அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார்.
நான் புனிதமான நெடுந்துார இலக்கை நோக்கிச் செல்கிறேன். அந்த பயணத்தின் போது, பக்கத்தில் இருந்து ஒரு நரி ஊளையிடுகிறது.
நான், என் பயணத்தை நிறுத்திவிட்டு, 'என்னை யார் என்று நினைத்தாய்!' என நரியிடம் பதில் சொல்வது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ, அப்படித்தான், இப்படிப்பட்ட நபர்களுக்கு பதில் சொல்வது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

