புற்றுநோய் ரசாயனம் கலப்பால் அதிரடி பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை
புற்றுநோய் ரசாயனம் கலப்பால் அதிரடி பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை
ADDED : பிப் 18, 2024 05:55 AM

சென்னை : நிறம் சேர்க்கப்பட்ட பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து, மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில், பஞ்சு மிட்டாய் விற்பனையில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்களிடம், 1,000 பாக்கெட் பஞ்சு மிட்டாய்களை, உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின், உணவுப் பாதுகாப்பு துறை ஆய்வகங்களுக்கு, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளிவந்தன. அதில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய, 'ரோடமைன் பி' ரசாயனம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன், ஆய்வில் கண்டுபிடிக்க முடியாத சில ரசாயன வகைகளையும், பஞ்சு மிட்டாய்களில் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுஉள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் நிறம் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களுக்கு தடை விதித்து, மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை, அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில், 'ரோட்டமைன் பி' என்ற செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டுஇருந்தது தெரியவந்தது.
உணவு பாதுகாப்பு மற்றும் தரம் சட்டப்படி, தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என, உறுதி செய்யப்பட்டு உள்ளது.
எனவே, உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி, 'ரோட்டமைன் பி' என்ற செயற்கை நிறமூட்டியைக் கொண்டு உணவுப் பொருட்கள் தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பரிமாறுதல் ஆகியவை தண்டனைக்குஉரிய குற்றம்.
இதுகுறித்து அவ்வப்போது ஆய்வு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க, உணவுப் பாதுகாப்பு துறை கமிஷனர் வாயிலாக, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எந்த வகையான மிட்டாய்க்கு தடை?
பஞ்சு மிட்டாயில் கண்டறியப்பட்ட, 'ரோட்டமைன் - பி' வேதிப்பொருள், தோல் தொழிற்சாலை, ஆடை தொழிற்சாலை, மை தயாரிப்பு உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.
இயற்கை உணவுகளில் உள்ள நிறங்கள், நம் உடலில் இருந்து 24 மணி நேரத்தில் சிறுநீர் வழியாக வெளியேறும். நச்சு நிறங்கள் வெளியேற, 45 நாட்கள் வரை ஆகும். நச்சு நிறங்கள் உடலில் தங்குவதால், சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம், மூளை பாதிக்கப்படலாம். புற்றுநோய் பாதிப்பும் ஏற்படும்.
எனவே, நிறம் சேர்க்கப்பட்ட பஞ்சு மிட்டாய்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சர்க்கரை பயன்படுத்தி தயாரிக்கப்படும் வெள்ளை நிற பஞ்சு மிட்டாய்களுக்கு தடையில்லை; அவற்றை விற்பனை செய்யலாம். பஞ்சு மிட்டாய் குறித்து, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
மெரினாவில் பஞ்சு மிட்டாய் விற்பனையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வடமாநிலத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள், பல்லாவரம் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பஞ்சு மிட்டாய் தயாரித்து, விற்பனை செய்து வந்துஉள்ளனர்.
அவர்கள் அளித்த முகவரியில் சோதனைக்கு சென்றபோது, அங்கு யாருமில்லை.
- பி.சதீஷ்குமார்
நியமன அலுவலர், சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை.