/
செய்திகள்
/
தமிழகம்
/
'லிவ் இன்' உறவில் கருத்தரித்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு மறுத்தது மனிதத்தன்மையற்றது மாவட்ட நீதிபதியின் செயலுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
/
'லிவ் இன்' உறவில் கருத்தரித்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு மறுத்தது மனிதத்தன்மையற்றது மாவட்ட நீதிபதியின் செயலுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
'லிவ் இன்' உறவில் கருத்தரித்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு மறுத்தது மனிதத்தன்மையற்றது மாவட்ட நீதிபதியின் செயலுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
'லிவ் இன்' உறவில் கருத்தரித்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு மறுத்தது மனிதத்தன்மையற்றது மாவட்ட நீதிபதியின் செயலுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
ADDED : மார் 22, 2025 06:26 AM
சென்னை : 'நீதிமன்ற பெண் உதவியாளருக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுத்து, மாவட்ட நீதிபதி மனிதத்தன்மையற்ற முறையில் செயல்பட்டு உள்ளார்' என, தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மகப்பேறு விடுப்பு வழங்க மறுத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
விண்ணப்பம்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், உதவியாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவரின் கணவர், 2020ல் இறந்து விட்டார். பின், 2024ல் மறுமணம் செய்தார். கருவுற்ற அவர், கடந்தாண்டு அக்டோபர், 18ல் மகப்பேறு விடுப்பு கோரி விண்ணப்பம் செய்தார்.
ஆனால், 'பெண் உதவியாளரின் திருமணத்துக்கு ஆதாரம் இல்லை; கருவுற்ற பிறகே மறுமணம்நடந்துள்ளது' எனக்கூறி, மகப்பேறு விடுப்பு வழங்க மறுத்து, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, விண்ணப்பத்தை திருப்பி அளித்தார்.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் உதவியாளர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.சுப்பிர மணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர், தன் கணவர்இறந்ததும், நன்கறிந்த ஆண் நண்பருடன், 'லிவ் இன்' உறவு முறையில் இருந்துள்ளார். அந்த ஆண் நண்பர், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
அந்த உறுதியின்படி, திருமணத்துக்கு முன் கருவுற்றுள்ளார். ஆனால், ஆண் நண்பர் மனுதாரரைதிருமணம் செய்ய மறுத்துள்ளார். அதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரும் முன்ஜாமின் பெற்று வந்துள்ளார்.
பின், உறவினர்கள் அறிவுறுத்தலில் மனுதாரரை அவரது ஆண் நண்பர் திருமணம் செய்துள்ளார். திருமண புகைப்படங்கள், திருமண அழைப்பிதழ் போன்றவை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த விபரங்கள், வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தின்கவனத்துக்கு கொண்டு வரப்பட்டன.
திருமணம் செய்து கொள்ளாமல் தம்பதியராக வாழும், 'லிவ் இன்' உறவு முறையை, உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அவ்வாறு இருக்கும் போது, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பழமைவாத போக்கில், மனிதத்தன்மையற்ற முறையில் செயல்பட்டு உள்ளார்.
இரக்கமற்ற உத்தரவு
திருமணத்தை பதிவு செய்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. நீதித் துறை அதிகாரிகள் தங்களை சீர்திருத்திக் கொண்டு செயல்பட வேண்டிய நேரம் இது.
மனுதாரர் விஷயத்தில் நீதிபதி நடவடிக்கை என்பது, முற்றிலும் தேவையற்றது. எனவே விடுப்பு வழங்க மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பெண் உதவியாளர் விடுப்பு எடுத்திருந்தால், அதை மகப்பேறு விடுப்பாக கருதி, விடுப்பு காலத்திற்கு முழு ஊதியம் வழங்க வேண்டும்.
விடுப்பு வழங்க மறுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர், பெண் ஊழியருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் நகலை, அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கும் அனுப்புமாறு, பதிவாளருக்கு அறிவுறுத்துகிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற இரக்கமற்ற உத்தரவுகள், நீதித்துறை அதிகாரிகளால் பிறப்பிக்கப்படாமல் இருக்க, அனைத்து நீதித்துறை அதிகாரிகளுக்கும் இதை அனுப்பி வைக்குமாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவின் கீழ்ப் பகுதியில் குறிப்பிட்டுள்ளனர்.