ஐயப்பனுக்கு தேன், தினை மாவை காணிக்கை தந்த மலைவாழ் மக்கள்
ஐயப்பனுக்கு தேன், தினை மாவை காணிக்கை தந்த மலைவாழ் மக்கள்
ADDED : டிச 07, 2024 11:54 PM
சபரிமலை:சபரிமலை காட்டுக்குள் குடிகொண்டுள்ள ஐயப்பனை வணங்க எல்லா ஆண்டும் மலைவாழ் மக்கள் வருவது வாடிக்கை. இந்த ஆண்டும் நேற்று முன்தினம் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற மலையேறி வந்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கோட்டூர் முண்டணி மாடன்தம்புரான் கோயில் டிரஸ்டி வினோத் முண்டணியின் தலைமையில் பாற்றாம் பாறை, குன்னத்தேரி, பிலாவிளை, கமலகம், முக்கோத்தி வயல், பொடியம், கொம்பிடி, சோனாம்பாறை, மாங்கோடு, மூளமூடு ,கைதோடு, பாங்காவு, ஆமலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் பிராவிளை, கோதையாறு, ஆறுகாணி உள்ளிட்ட வனப் பகுதிகளை சேர்ந்த 145 பேர் வந்தனர்.
காடுகளில் இருந்து கால்நடையாக புறப்பட்ட இவர்கள் கோட்டூர் முண்டணி மாடன் தம்புரான் கோயிலில் இருந்து இருமுடி கட்டு எடுத்து சன்னிதானத்துக்கு வந்தனர். இதில் மாற்றுத்திறனாளியான ஐயப்பன் காணி 45, என்பவர் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை தவழ்ந்து வந்தார்.
மூங்கில் துண்டுகளில் நிறைக்கப்பட்ட காட்டு தேன், கதலி பழக்குலை, குந்திரிகம், கரும்பு, தினை மாவு போன்ற பொருட்களையும் காட்டில் பூக்கும் பூக்களில் கட்டப்பட்ட மாலைகளையும் இவர்கள் ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கி தரிசித்தனர். இவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.