UPDATED : அக் 03, 2025 03:20 PM
ADDED : அக் 02, 2025 06:39 PM
தினமலர் தொடங்கிய முதல் நாள் பேப்பரில் முதல் பக்கத்தில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வாழ்த்து இடம் பெற்றிருந்தது. அவர் எழுதிய கடைசி கவிதையும் தினமலருக்காக என்பது பலருக்கு தெரியாத உண்மை.
1954 செப்டம்பர் 24ம் தேதி கவிமணி இந்த கவிதையை எழுதினார். அதற்கு சில நாட்கள் முன்னதாக அவருக்கு தெரிவிக்கப்பட்ட தினமலர் ஆண்டுவிழா தேதிக்குள் கவிதை எழுதி அனுப்ப இயலாத நிலையில் அவர் இருந்தார். 26ம் தேதி அந்த கவிதை தினமலர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தது. உடனே அச்சுக்கு அனுப்ப உத்தர விட்டு இருந்தார் ராமசுப்பையர்.
அவரது ஆணைப்படி கவிமணியின் கவிதை அச்சு கோர்க்கப்பட்டு முதல் பக்கத்தில் சேர்க்கப் பட்ட மகிழ்ச்சியான வேளையில், மற்றொரு செய்தி வந்தது. அதையும் உடனே சேர்க்க வேண்டிய அவசியம் உருவானது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை காலமாகி விட்டார், என்பதே அந்த செய்தி. காலதேவன் வீட்டு வாசலில் காத்திருந்த நேரத்தில், கவிமணி அவசரமாக பேப்பரும் பேனாவும் தேடியெடுத்து எழுதிய கடைசிக் கவிதை தான் என்ன?
ஐயம் அறவே உண்மைகளை
ஆராய்ந்து எவருக்கும் அஞ்சாமல்
செய்ய தமிழில் எடுத்தோதும்
திருவனந்த தினமலர் நீ
ஐயன் முருகன் திருவருளால்
அறிஞர் போற்றி பாராட்ட
வையம் மீது நீடூழி
வாழ்க வாழ்க வாழ்கவே!