ADDED : அக் 13, 2024 05:56 AM
திருச்சி : திருச்சி, தில்லைநகர், அண்டகுண்டான் பகுதியை சேர்ந்தவர் இசார் அலி, 35. டூ - வீலர் மெக்கானிக்கான அவர், நேற்று முன்தினம், பஸ்சில் சென்றுள்ளார்.
அப்போது, அவருடன் பயணித்த சின்னசாமி நகரை சேர்ந்த சதாம் உசேன், 25, என்பவர், இசார் அலியின் மொபைல் போனை திருடிச் சென்றுள்ளார். போனை பறி கொடுத்த இசார் அலி, சதாம் உசேனை தேடியுள்ளார்.
இந்நிலையில், அன்று இரவு அண்டகுண்டான் பகுதியில், ஒரு டிபன் கடையில், சதாம் உசேன் சாப்பிட்டு கொண்டிருந்த போது, அங்கு வந்த இசார் அலி, தன்னிடம் இருந்து திருடிய மொபைல் போனை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார்.
போனை விற்று, பணத்தை செலவு செய்து விட்டதாக சதாம் உசேன் கூறியதால், ஆத்திரமடைந்த இசார் அலி, அவரை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, தில்லைநகர் போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.